டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவை இறக்க வேண்டும் - கம்பீர் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      விளையாட்டு
Rohit Sharma-Gambhir 2019 09 08

புது டெல்லி : டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவை இறக்க வேண்டும் என கம்பீர் வலியுறுத்தி உள்ளார்.

அடுத்த மாதம் 2-ம் தேதி உள்ளூரில் தொடங்கும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக மயங்க் அகர்வாலுடன் ரோகித் சர்மாவை களம் இறக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கம்பீர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவை தொடக்க ஆட்டக்காரராக இறக்க வேண்டும் என்ற முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் யோசனையை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். கடந்த காலங்களில் பரீட்சார்த்த முயற்சியாக நாம் தொடக்க வீரர்களை மாற்றி பயன்படுத்திய நிகழ்வு உண்டு. மிடில் வரிசையில் விளையாடிய ஷேவாக் தொடக்க வரிசைக்கு கொண்டு வரப்பட்டார். தீப் தாஸ் குப்தா இதே போல் பயன்படுத்தப்பட்டார். தீப் தாஸ்குப்தாவை விட ரோகித் சர்மா சிறந்தவர். ரோகித் சர்மாவுக்கு உள்நாட்டில் 6 டெஸ்டுகளில் விளையாட வாய்ப்பு வழங்கினால், நிச்சயம் அவரால் வெளிநாட்டு போட்டிகளிலும் ஜொலிக்க முடியும். அதற்காக நேரடியாக வெளிநாட்டு டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கும் படி கூறினால் அது கடினமாகி விடும். ராகுலை விட ரோகித் சர்மாவுக்கே நான் முன்னுரிமை அளிப்பேன். இளம் வீரரான ராகுலை மாற்று தொடக்க ஆட்டக்காரராக வைத்துக் கொள்ளலாம். ரோகித் சர்மாவை அணிக்கு தேர்வு செய்தால், கட்டாயம் அவரை ஆடும் லெவன் அணியில் சேர்க்க வேண்டும். இப்போது அவர் டெஸ்டில் விளையாடாவிட்டால், சில ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் டெஸ்டில் கால்பதிப்பது கடினமாகி விடும். டெஸ்ட் கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் சிவப்பு நிற பந்து அதிகமாக ஸ்விங் ஆகும். அதை சமாளிக்கக் கூடிய தொழில்நுட்பமும், அனுபவமும் ரோகித்திடம் உண்டு. புதிய பந்தில் எப்படி ஆடுவது என்பதை அறிவார். ஆனால் அவருக்கு போதுமான வாய்ப்பு வழங்க வேண்டியது அவசியமாகும். யுவராஜ்சிங் போல் ஒரு டெஸ்டில் மட்டும் தொடக்க ஆட்டக்காரராக ஆட வைத்து விட்டு ஒதுக்கி விடக்கூடாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தற்போதைய இந்திய அணியில் துருப்பு சீட்டாக கூட உருவாகலாம். இவ்வாறு கம்பீர் கூறினார்.

32 வயதான ரோகித் சர்மா இந்திய அணிக்காக 27 டெஸ்டுகளில் விளையாடி 3 சதம் உள்பட 1,585 ரன்கள் எடுத்து இருக்கிறார். இவற்றில் பெரும்பாலும் 5 அல்லது 6-வது பேட்டிங் வரிசையில் தான் ஆடியிருக்கிறார். சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற்றிருந்தாலும் களம் காண வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து