நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      தமிழகம்
OPS inaugrate 2019 09 09

சென்னை : நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க உறுதியாக போட்டியிடும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திருவேற்காட்டில் ஆர்.எம்.கே. கட்டுமான நிறுவனத்தின் ஆர்.எம்.கே. சோழா கார்டன்சின் கிளப் அவுஸை துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நேற்று திறந்துவைத்தார். இதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு வீடு எப்படி சுகாதாரமாக காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தோடு இந்த கிளப் அவுஸ் வளாகத்தை முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.எஸ்.முனிரத்தினம் உருவாக்கியுள்ளார். ஜிம், மருத்துவ வசதிகள், வீடுகளை விட்டு வெளியே யாரும் செல்லாத அளவுக்கு அனைத்து அம்சங்களும் உள்ளடக்கிய வகையில் நட்சத்திர ஓட்டல்களை போல வீடுகளை கட்டி அமைத்துள்ளார். அவருடைய வழியை மற்ற கட்டுமானத்துறையினரும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- திருமழிசையில் செயற்கை கோள் நகரம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டதே அது இப்போது எந்த நிலையில் இருக்கிறது?
பதில்:- அதற்காக 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு முடிவடையும் தருவாயில் இருக்கிறது.
கேள்வி:- ரயில்வே வாரியத்தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே?
பதில்:- அனைத்து நிலைகளில் தமிழ் இருக்க வேண்டும் என்பது தான் அ.தி.மு.க ஆட்சியின் நிலைப்பாடு அதில் நாங்கள் எப்போதும் பின்வாங்க போவதில்லை அந்த கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.
கேள்வி:- ஓ.பி.ரவீந்திரநாத்குமார் நாம் இந்து என்கிற உணர்வோடு இருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறாரே?
பதில்:- பொதுவாக எதிர்க்கட்சிகள், அவர் முன்னால் பின்னால் பேசியதை எடுத்துக்கொண்டு நடுவில் இருக்கும் பிரச்னைக்குரிய வார்த்தைகளை பெரிதாக்குகிறார்கள். அந்த வகையில்தான் ரவிந்திரநாத் பேசியதையும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். முன்னால் பின்னால் பேசிய பகுதிகளை இணைத்து பார்த்தால் உண்மை புரியும்.
கேள்வி:- இந்து என்று பேசினால்தான் அமைச்சராக முடியும் என்பதற்காக அவர் அப்படி பேசியதாக கூறப்படுகிறதே?
பதில்:- அந்த விமர்சனத்திற்கே போக வேண்டாம். முன்னால் பின்னால் என்ன பேசினார் என்பதை இணைத்து பார்த்தால் சரியாக இருக்கும் அப்போது தான் விஷயம் தெரியும்.
கேள்வி:- முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பியிருக்கின்றனவே?
பதில்:- ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டின் அடிப்படையில் 217 திட்டங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதில் 70 சதவீத திட்டங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு திட்ட அறிக்கைகளின் அடிப்படையில் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட திட்டங்கள் தீவிர பரிசீலனையில் இருக்கின்றன. முன்னேற்றத்தில் இருக்கின்றன. இந்த நிலையில் வெளிநாட்டு பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், மிகப்பெரிய திட்டங்கள் குறித்து நாளை (இன்று) சென்னை வர இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரிவாக அறிவிப்பார்.
கேள்வி:- நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தல் பற்றி?
பதில்:- இரு தொகுதிகளிலும் நடைபெறும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க உறுதியாக போட்டியிடும் இரு தொகுதிகளிலும் உறுதியாக மகத்தான வெற்றி பெறும்.
கேள்வி:- நாங்குநேரி தொகுதியில் நாங்கள் போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் கூறி அது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறதே?
பதில்:- அது தி.மு.க - காங்கிரஸ் இடையில் நடக்கும் பனிப்போர், அதுபற்றி கருத்து சொல்வது இந்த நேரத்தில் சரியாக இருக்காது.
கேள்வி:- பத்திரிகையாளர்களுக்கு வீட்டு வசதி வாரிய வீடுகள் வழங்குவதில் சதவீதம் அதிகரிக்கப்படுமா?
பதில்:- ஏற்கனவே பத்திரிகையாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் 100 சதவீதம் முழுமையாக வழங்கப்படுகின்றன. அதில் அதிக சதவீதத்தில் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. அது அரசின் தீவிர பரிசீலனையில் இருக்கிறது. அதுபற்றி மகிழ்ச்சியான அறிவிப்பு விரைவில் வரும் மூத்த பத்திரிகையாளர்களுக்கு கூடுதல் சதவீதமாக வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கேள்வி:- நீர் பங்கீடு தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா?
பதில்:- அது பற்றி அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் இதுவரை வரவில்லை.
கேள்வி:- ஒரே நாடு: ஒரே ரேஷன் கார்டு பிரச்னை பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில்:- ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் எந்த குழப்பமும் வராது. நம்முடைய பொது விநியோக திட்டம் அனைவருக்குமான திட்டம். அதில் ஒரு கிராம் அரிசியும் குறையாது. அதில் எந்த மாற்றமும் இருக்காது.  இவ்வாறு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன், அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோரும் மாவட்ட செயலாளர்கள் அலெக்சாண்டர், சிறுணியம் பலராமன்,மற்றும் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.,கே.எஸ்.விஜயகுமார், முன்னாள் எம்.பி. டாக்டர் வேணுகோபால், முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி, அப்துல்ரஹீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து