நாட்டின் வயது குறைந்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன்

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019      இந்தியா
tamilisai soundarrajan 2019 09 10

புது டெல்லி : தெலுங்கானா மாநிலத்தின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் (58) நாட்டில் உள்ள மாநில கவர்னர்களில் குறைந்த வயதுடையவராகவும், ஆந்திரா மாநிலத்தின் பிஸ்வா பூஷன் ஹரிசந்தன் (85) வயதான கவர்னராகவும் கருதப்படுகிறார்.

கடந்த 1-ம் தேதி 5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்தார். இதன்பின் நாட்டில் உள்ள மாநில கவர்னர்களின் சராசரி வயது 73 ஆக இருக்கிறது. 58 வயதான தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராகவும், தேசியச் செயலாளராகவும் இருந்தவர். தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக இருந்த நரசிம்மனின் பதவிக்காலம் முடிந்த நிலையில் அங்கு கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். 60 வயதுக்குக் கீழான கவர்னர்களில் தமிழிசை மட்டுமே இருக்கிறார். அவருக்கு அடுத்து மிகக்குறைந்த வயதில் குஜராத் மாநில கவர்னராக இருக்கும் ஆச்சார்யா தேவ்ரத் உள்ளார். இவருக்கு வயது 60. ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் இருக்கும் கவர்னர்களின் வயது 70 முதல் 79-க்குள்ளாகவே இருக்கிறது. 28 மாநிலங்களில் உள்ள கவர்னர்களில்  ஒருவர் 60 வயதுக்குக் கீழாகவும், 60 - 69 வயதில் 7 பேரும், 70- 79 வயதில் 14 பேரும்,  80 - 89 வயதில் 6 பேரும் உள்ளனர்.

தற்போது இரு மாநிலங்களுக்கும் ஒரே கவர்னராக அசாம் கவர்னராக இருக்கும் ஜகதிஷ் முக்கிதான், மிசோரம் மாநில கவர்னராகவும் மார்ச் மாதத்தில் இருந்து கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். தற்போதுள்ள கவர்னர்களில் 19 பேர் முதல் முறையாக கவர்னர்களாக வந்துள்ளனர். 9 பேர் ஏற்கெனவே வேறு மாநிலங்களில் கவர்னராக இருந்தவர்கள். 6 மாநிலங்களில் கவர்னர்களாக பெண்கள் உள்ளனர். ஆந்திர மாநில கவர்னராக இருக்கும் ஹரிசந்தன் பா.ஜ.க.வின் மூத்த தலைவர். கடந்த 1934-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி பிறந்தவரான ஹரிசந்தன் ஒருங்கிணைந்த ஆந்திராவின் 23-வது கவர்னராகவும், தற்போது இவர் மிகவும் வயதான கவர்னராகவும் இருக்கிறார். ஒடிசா மாநிலத்தின் ஐகோர்ட்டில் கடந்த 1961-ம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் தொடங்கிய ஹரிசந்தன்,  1971-ம் ஆண்டு ஜன சங்கத்திலும், 1980-ம் ஆண்டு ஒடிசா பா.ஜ.க.விலும் இணைந்தார். நாட்டில் அவசர நிலை கொண்டு வந்தபோது அதை எதிர்த்ததால் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஹரிசந்தன் சிறையில் அடைக்கப்பட்டார். மத்தியப் பிரதேச கவர்னர் லால்ஜி டாண்டனுக்கு 84 வயதாகிறது. இவர் 2-வது வயது முதிர்ந்த கவர்னராக உள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து