முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளையுடன் முடிவடைகிறது விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம்

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்  : நிலவில் தரையிறங்கும் கடைசி நிமிடத்தில் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்ட சந்திரயான்-2 விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் வரும் சனிக்கிழமை முடிவடையவுள்ள நிலையில், அதனை நாசாவால் தொடர்புகொள்ள முடியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலகிலேயே முதல் நாடாக, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணுக்கு அனுப்பியது. புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி, நிலவைச் சென்றடைந்த விண்கலத்திலிருந்து, விக்ரம் லேண்டர் பகுதி கடந்த 2-ம் தேதி வெற்றிகரமாக பிரித்து விடப்பட்டது.

இந்த நிலையில், திட்டமிட்டபடி கடந்த 7-ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் லேண்டர் விக்ரம் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்குவதற்கான முயற்சியை விஞ்ஞானிகள் தொடங்கினர். மிகவும் கடினமான பகுதிகளை எளிதாக தாண்டிய லேண்டர் விக்ரம் கடைசி சில நிமிடங்களில் நிலவின் பரப்பிலிருந்து 2.1 கி.மீ. தொலைவில் லேண்டர் வந்த போது, அதற்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதன் பின்னர் லேண்டர் விக்ரம் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது என இஸ்ரோவின் தலைவர் சிவன் தழுதழுத்த குரலில் கூறினார். பிரதமர் மோடி அவருக்கு ஆறுதல் கூறிய புகைப்படங்களும் மனதை நெகிழ வைத்தன.

சந்திரயான் -2 திட்டத்தை எப்படியும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முனைப்பில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அப்போது தான் இஸ்ரோவுக்கு ஆதரவாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா களமிறங்கியது.

நாசா கடந்த 2009-ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பிய ஆர்பிட்டர் ஒன்று நிலவை சுற்றி வருகிறது. அதன் உதவியுடன் லேண்டர் விக்ரமை கண்டுபிடிக்கலாம் என்று அதற்கான பணிகளில் நாசா ஈடுபட்டு வருகிறது. லேண்டர் விக்ரம் நிலவில் ஒரு நாள் (பூமியில் 14 நாட்கள்) ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பணியைத் தொடங்கிய நாசா, ஆர்பிட்டரின் உதவியுடன் லேண்டர் விக்ரம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டது.  லேண்டர் விக்ரமுடன் தொடர்பை ஏற்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வரும் சனிக்கிழமையுடன் விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைகிறது. ஆனால், இதுவரை லேண்டர் விக்ரம் இருக்கும் நிலை குறித்து எந்தத் தகவலையும் நாசா வெளியிடவில்லை. நிலவில் இருக்கும் சூழ்நிலை காரணமாக நாசாவின் ஆர்பிட்டர், லேண்டர் விக்ரமை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து