முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருத்தி அச்சிடப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள்: முதல்வர் எடப்பாடி வழங்கினார்

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மாவட்ட அளவில் பரவலாக்கப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கும் திட்டத்தின் கீழ் திருத்தி அச்சிடப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணியை முதல்வர் எடப்பாடிபழனிசாமி தலைமை செயலகத்தில் நேற்று துவக்கி வைத்தார்.

பொது விநியோகத் திட்டத்தினை முழுமையாக கணினிமயமாக்கும் திட்டத்தின் கீழ், பழைய காகித வடிவிலான குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நடைமுறை 1.04.2017 அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் துவக்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே நடைமுறையில் இருந்த காகித வடிவிலான அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மாற்றாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளன. மேலும், புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் செய்பவர்களுக்கும் மின்னணு குடும்ப அட்டைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து மின்னணு குடும்ப அட்டைகளும் மைய அளவில் சென்னையில் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்குஅனுப்பப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் போன்ற திருத்தங்கள் அனைத்தும் www.tnpds.gov.in  என்ற இணையதளம் வாயிலாக பெறப்பட்டு, துறை அலுவலர்களின் கள ஆய்வுக்கு பின்னர் கோரிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு வருகின்றன. மைய அளவில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டும், பயனாளிகளுக்கு அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் திருத்தப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு ஏதுவாகவும், மாவட்ட அளவில் மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் வாயிலாக, புதிய மின்னணு குடும்ப அட்டைகள் கோரும் பயனாளிகளுக்கு மாவட்ட அளவிலேயே புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு விலையில்லாமல் வழங்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், நடைமுறையில் உள்ள மின்னணு குடும்ப அட்டைகளில் பயனாளிகள் கோரிய திருத்தங்களை உள்ளடக்கிய திருத்தப்பட்ட மின்னணு குடும்ப அட்டையை சம்மந்தப்பட்ட பயனாளிகள் ரூ. 20 கட்டணமாக செலுத்தி மாவட்டஅளவில், வட்ட வழங்கல் அலுவலகங்களிலும், சென்னையில் உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தற்போது மாவட்ட அளவில் பரவலாக்கப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கும் திட்டத்தின்கீழ் திருத்தி அச்சிடப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகளை 5 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி நேற்று துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், தலைமைச் செயலாளர் சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சுதா தேவி, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் கண்ணன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து