முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி- அதிபர் ஜி ஜின்பிங் வருகை எதிரொலி: மாமல்லபுரம் - கோவளத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரம் மற்றும் கோவளத்தில் நேற்று சீன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக மாமல்லபுரத்தில் சிற்பங்கள் உள்ள பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர். மேலும் வருவாய்த்துறையினரும், போலீசாரும் வீடு வீடாக சென்று சோதனை நடத்தினர். வெண்புருஷம் என்ற கிராமத்தில் உரிய ஆவணமின்றி தங்கியிருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதே போல் மேலும் சிலரும் பிடிபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைத்தார். இதை ஏற்று அடுத்த மாதம் 2-வது வாரம் மோடி- ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இரு நாட்டுத் தலைவர்களையும் சந்திக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11-ம் தேதி இந்தியா வருகிறார். அவரது தனி விமானம் சீனாவில் இருந்து நேரடியாக சென்னை வருகிறது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறங்கும் அவர், பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் சீன அதிபரை வரவேற்கும் பிரதமர் மோடியும்,  அவருடன் ஹெலிகாப்டரில் புறப்பட்டு வருகிறார். திருவிடந்தையில் தரை இறங்கிய பிறகு பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் காரில் கோவளத்துக்கு புறப்பட்டு செல்வார்கள். கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த சந்திப்பின்போது இந்தியா- சீனா இடையே உள்ள மிக முக்கிய பிரச்சினைகள் குறித்து மோடியும் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். மேலும் மாமல்லபுரத்தில் உள்ள சில அபூர்வ, அதிசய சிலைகளுக்கு மத்தியில் இரு நாட்டு தலைவர்களும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதையடுத்து அந்த சிற்ப பகுதிகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமின்றி மாமல்லபுரத்தில் மோடி- ஜி ஜின்பிங் இருவரும் ஏராளமான புகைப்படங்களும் எடுத்துக் கொள்ள உள்ளனர். இதற்காக சிற்பங்கள் உள்ள பகுதிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட சிறப்பு காவல் படையினர் நியமிக்கப்பட்டு இரவு பகல் காவல் இருந்து வந்தனர். தற்போது பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 5 போலீசாரும் ஏ.கே 47 துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஒருவரும் நியமிக்கப்பட்டு இரவு பகல் இரண்டு குழுக்களாக கண்காணித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் உளவுத்துறை போலீசார் மற்றும் சிறப்பு காவல் படையினர் இணைந்து இரவு பகலாக உள்ளுர் பொது மக்களையும் சுற்றுலா பயணிகளையும் ரகசியமாக கண்காணிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சிற்பங்கள் உள்ள பகுதிகளை சீனாவில் இருந்து வந்திருந்த அந்நாட்டு தூதரக அதிகாரிகள் சுற்றுலாத்துறை, தொல்லியல்துறை, வெளியுறவுத்துறை அதிகாரிகள் என 20-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் பேச்சுவார்த்தை நடத்தும் இடம் குறித்தும், அதற்கான பாதுகாப்பு வசதி எப்படி உள்ளது மற்றும் அப்பகுதியின் சுகாதாரம், சுற்றுச்சூழல் எப்படி உள்ளது எனவும் ஆய்வுகளை மேற்கொண்டனர். அவர்களுடன் இந்திய சுற்றுலாத்துறை அதிகாரிகளும் தமிழக சுற்றுலாத்துறை அலுவலர்களும் தொல்லியல் துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் மோடி-சீன அதிபர் வருகையையொட்டி பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலாசேத்ரா மாணவர்கள் இந்த கலை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இந்த கலை நிகழ்ச்சிகளை மோடியும், சீன அதிபரும் பார்வையிடுகிறார்கள். இந்த கலை நிகழ்ச்சிக்காக கலாசேத்ரா மாணவர்கள் ஒத்திகை பார்த்து வருகின்றனர். இந்தியாவின் கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாநாட்டின் போது முதல் நாளில் 30 நிமிடங்களும், மறுநாள் 20 முதல் 25 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. பிரதமர் மோடி, ஜிஜின்பிங் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் வருவாய்த்துறையினரும், போலீசாரும் வீடுவீடாக சோதனை நடத்தினர். உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த நைஜீரிய வாலிபர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து