முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்குநேரி- விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வினர் இன்று முதல் விருப்பமனு அளிக்கலாம் - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவிப்பு: 23-ம் தேதி நேர்காணல்

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை  : நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விருப்பமனுக்கள், இன்று முதல் பெறப்படும் என்றும் 23-ம் தேதி வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. வாக இருந்த வசந்தகுமார், கன்னியாகுமரி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். விக்கிரவாண்டி தொகுதியின் தி.மு.க. உறுப்பினர் ராதாமணி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காலமானார், இதைத் தொடர்ந்து இரு தொகுதிகளும் காலியாக இருப்பதாக சட்டமன்ற செயலகம் அறிவித்தது. இதையடுத்து இரு தொகுதிகளுக்கும் ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 17 மாநிலங்களில் உள்ள 64 சட்டசபை தொகுதிகளுக்கும் அரியானா, மகராஷ்ரா உள்ளிட்ட இரு மாநிலங்களுக்கு சட்டமன்ற பொதுத் தேர்தலையும் அறிவித்தார். தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கை நாளை வெளியிடப்படுகிறது. நாளை முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. வரும் 30-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலனை வரும் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை அக்டோபர் 3-ம் தேதி திரும்ப பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அக்டோபர் 27-ம் தேதி தேர்தல் நிறைவடைகிறது. 

இந்த நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

வி்க்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி அ.தி.மு.க. வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்றவர்கள் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் 22-ம் தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரையிலும், 23-ம் தேதி திங்கட்கிழமை காலை 10- மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ. 25 ஆயிரம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அப்படிவங்களை 23-ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் தவறாமல் தலைமைக் கழகத்தில் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில் முதல்வரும், துணை முதல்வரும் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அ.தி.மு.க. வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்புக் கோரி விருப்பமனு அளித்துள்ள அ.தி.மு.க. தொண்டர்களுக்கான நேர்காணல், தலைமைக் கழகத்தில 23-ம் தேதி பிற்பகல் 3-30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நேர்காணலில் விருப்பமனு அளித்துள்ள  உடன் பிறப்புகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், விக்கிரவாண்டியில் தி.மு.க. போட்டியிடும் என்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இரு தொகுதிகளுக்குமான விருப்பமனுக்களை நாளை முதல் வழங்கலாம் என்று தி.மு.க. - காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து