முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: சி.பி.ஐ. கோர்ட்டில் கல்யாண் சிங் சரண்

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதியின் முன்னர் உ.பி. முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங் நேற்று சரணடைந்தார்.  

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அம்மாநில முதல்-மந்திரியாக கல்யாண் சிங் பதவி வகித்தார்.

பாபர் மசூதி இடிப்புக்கு சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோருடன் கல்யாண் சிங்கும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.   ராஜஸ்தான் மாநில கவர்னராக இருந்ததால் கல்யாண் சிங் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. அந்த பதவிக்காலம் முடிந்ததையடுத்து கடந்த 9-ந் தேதி கல்யாண் சிங் மீண்டும் பா.ஜனதாவில் சேர்ந்தார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக கல்யாண் சிங்குக்கு சம்மன் அனுப்பக்கோரி லக்னோ சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்று, கல்யாண் சிங் 27-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென நீதிபதி எஸ்.கே.யாதவ் சம்மன் அனுப்பினார்.   அதன்படி, கல்யாண் சிங் நேற்று நீதிபதி முன்னிலையில் சரண் அடைந்தார். கோர்ட் வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நான் நீதிமன்றத்தை எப்போதும் மதிப்பவன். ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனுக்கு மதிப்பளித்து  நான் வந்துள்ளேன் என குறிப்பிட்டார்.  இதேவழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோருக்கு ஏற்கனவே ஜாமீன் அளிக்கப்பட்ட நிலையில் கல்யாண் சிங்கின் வழக்கறிஞர் நேற்று தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து