முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: 3 தனியார் மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன்

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 3 தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக இருப்பவர் வெங்கடேசன். இவரது மகன் உதித் சூர்யா. இவர், 2019-20ம் ஆண்டு நீட் தேர்வின் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்ந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், அசோக் கிருஷ்ணன் என்ற பெயரில் உதித்சூர்யா படிக்கும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு இ.மெயில் மூலம் புகார் ஒன்று வந்தது. அதில், உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்வு விண்ணப்பத்தில் உள்ள மாணவரின் புகைப்படத்திற்கும் தற்போது தேனி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் உதித்சூர்யாவின் புகைப்படத்திற்கும் வித்தியாசங்கள் உள்ளன என்று அதில் கூறப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் தேனி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. டி.ஜி.பி. ஜாபர்சேட் உத்தரவின்பேரில், ஐ.ஜி. சங்கர் மேற்பார்வையில் எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் நடத்திய விசாரணையில், பெரிய அளவில் நெட்ஒர்க் அமைத்து பலர் முறைகேடாக நீட் தேர்வு எழுதியது தெரியவந்தது. அதையடுத்து, மாணவன் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தைடாக்டர் வெங்கடேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

டாக்டர் வெங்கடேசன் கொடுத்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த சரவணன் அவரது மகன் பிரவீன், டேவிட் மற்றும் அவரது மகன் ராகுல், மாதவன் மற்றும் அவரது மகள் அபிராமி ஆகிய 6 பேரையும் போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவர்களது சான்றிதழ்களை பரிசோதித்தபோது, அவர்கள் அனைவருமே ஆள் மாறாட்டம் மூலம் நீட் தேர்வு எழுதியது தெரியவந்துள்ளது. மேலும், தமிழகம் மட்டுமின்றி கேரளா, மகராஷ்டிரா, உத்திரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் வரை நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையே, புகாருக்குள்ளான மாணவர்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்டது தொடர்பாக சத்யசாய், எஸ்.ஆர்.எம் மற்றும் பாலாஜி மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது. நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக நேற்று முன்தினம் கைதான மாணவி அபிராமி சத்யசாய் கல்லூரியிலும், ராகுல் என்ற மாணவன் எஸ்.ஆர்.எம் கல்லூரியிலும், பிரவீன் என்ற மாணவன் பாலாஜி மருத்துவக்கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர். இதன் அடிப்படையில், கல்லூரி முதல்வர்களுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து