முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட்தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்: எதிர்காலத்தில் முறைகேடுகள் நடக்காத வகையில் அரசு விழிப்போடு செயல்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சேலம் : நீட்தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் ஏதும் ஏற்படாவண்ணம் அரசு விழிப்போடு இருந்து செயல்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அருளாசியோடு இன்றைக்கு பல்வேறு சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெற்று செயலாற்றிக் கொண்டிருக்கின்றோம். இன்றைய தினம் மேட்டூர் அணையில் தொடர்ந்து 120 அடி தண்ணீர் இருந்து கொண்டிருக்கிறது. பாசனத்திற்கு தேவையான நீர் திறந்து விடப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தமிழ் பாடம் நீக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதை தொடர்ந்து நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க. போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார்களே?
பதில்:- டி.என்.பி.எஸ்.சி தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். தமிழுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டு டி.என்.பி.எஸ்.சி செயல்பட்டு வருகிறது.
கேள்வி:- கீழடி ஆராய்ச்சிக்கு தமிழ்நாடு அரசு உரிய நிதி ஒதுக்கியுள்ளதா?
பதில்:- கீழடி ஆராய்ச்சிப் பணிகள் திட்டம் 1, 2, 3-க்குத் தான் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. 4 மற்றும் 5-ஆம் கட்ட ஆராய்ச்சிப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து அது நடைபெறும்.
கேள்வி:- கீழடிக்கு நேரில் செல்வீர்களா?
பதில்:- அமைச்சர் பாண்டியராஜன் நேரடியாக சென்று ஆலோசனை வழங்கி, உரிய முறையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்குத் தேவையான நிதி ஒதுக்கி, அந்தப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு அரசு முழுமையான ஒத்துழைப்பை நல்கி வருகிறது.
கேள்வி:- விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தலில் பா.ஜ.க.யின் ஆதரவு யாருக்கென்று விரைவில் தெரிவிப்போம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லியிருக்கிறாரே? அவர்களைப் பொறுத்தவரை இரண்டு பக்கமும் கலந்தாலோசிக்காமல் முடிவு செய்திருக்கிறார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?
பதில்:-  இது இடைத் தேர்தல். இடைத்தேர்தலில் நாங்கள் தான் போட்டியிடுவோம் என்று ஏற்கனவே அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் எங்களுடைய விருப்பத்தைத் தெரிவித்திருக்கின்றோம்.
கேள்வி:- நீட் தேர்வு குளறுபடி குறித்து...
பதில்:- முறைகேட்டை கண்டுபிடிப்பதே நம்முடைய காவல் துறைதான். எங்கெங்கெல்லாம் முறைகேடு நடந்திருக்கிறதோ அதனை கண்டறிந்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இது மத்திய அரசு நடத்தும் தேர்வு. எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் ஏதும் ஏற்படாவண்ணம் அரசு விழிப்போடு இருந்து செயல்படும்.
கேள்வி:- ஐ.நா. சபையில் பாரதப் பிரதமர் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்று தமிழில் பேசியதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்:- அதனை தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாக நான் கருதுகின்றேன்.
கேள்வி:- அவசர ஊர்திகள், கமிஷன் பெற்று கொண்டு, குறிப்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே செல்வதாக தெரிவிக்கின்றார்களே?
பதில்:- அவசர உதவிக்கு போன் செய்தாலே ஆம்புலன்ஸ் வந்துவிடும், உடனே மருத்துவமனையிலும் சேர்த்து விடுகிறார்கள். நீங்கள் கூறுவது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. அதனை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு, அது போல் ஏதும் தவறு நடைபெறுகிறதா என்பது ஆய்வு செய்யப்படும்.
கேள்வி:- தி.மு.க. ஆட்சியில் தடுப்பணைகள் ஏதும் கட்டவில்லை என்று நீங்கள் சொல்கின்றீர்கள். பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரை முருகன் மாயனூர் அணையை கட்டியது தி.மு.க. ஆட்சியில்தான். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் எந்த அணையும் கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கின்றாரே?
பதில்:- மாயனூர் அணை அம்மா தான் கட்டினார். வேண்டுமென்றே சொல்கிறார். ஏதாவதொன்றை சொல்ல வேண்டுமென்று சொல்கிறார். குடிமராமத்துத் திட்டத்தை அவர்கள் தான் கொண்டு வந்தோம் என்கிறார்கள். ஏதேனும் பேட்டி கொடுத்திருக்கின்றார்களா? எந்தப் பகுதியிலாவது தூர்வாருவதை பார்த்திருக்கின்றீர்களா? சுமார் 83 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் அரசு தான் மேட்டூர் அணையை தூர்வாரியது. தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் ஏரிகள், குளங்கள், குட்டைகள் தூர்வார முடிவு செய்து, ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ஏரிகளை தேர்வு செய்து, போதுமான நிதி ஒதுக்கி, தூர்வாரி கொண்டிருக்கின்றோம். இது போல் தி.மு.க. ஆட்சியில் ஏதும் செய்தார்களா? ஆனால் குறை மட்டும் சொல்வார்கள்.

அதே போல, தடுப்பணை கட்டுவதற்கு ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கி, நதிகள், ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. எங்கள் அரசைப் பொறுத்தவரைக்கும், நீர் மேலாண்மைத் திட்டம் சிறப்பாக இருக்க வேண்டுமென்பதற்காக ஓய்வு பெற்ற பொறியாளர்களை நியமித்து, அவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக சென்று, ஆய்வு நடத்தி ஆய்வறிக்கை சமர்ப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதனடிப்படையில் கரூர் அருகில் தடுப்பணை கட்டவிருக்கின்றோம். ஏற்கனவே அம்மா இருந்த பொழுது ஆதனூர்-குமாரமங்கலத்தில் தடுப்பணை கட்டப்படும் என்று அறிவித்து அந்தத் தடுப்பணைக்கான பணிகள் தொடங்கப்பட்டு 20 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளன. எஞ்சிய பணிகள் தண்ணீர் வந்ததினால் நிறுத்தப்பட்டுள்ளது, மீண்டும் தொடரும்.

மேட்டூர் அணையிலிருந்து கொள்ளிடம் வரைக்கும் சாத்தியமான இடங்களில் தடுப்பணை கட்டப்படும். அம்மா இருந்த காலத்தில், மாயனூர் கதவணையிலிருந்து குண்டாறு வரை ஒரு கால்வாய் வெட்டி தண்ணீர் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். அந்தத் திட்டமும் இன்னும் ஓராண்டு காலத்திற்குள் எங்களுடைய அரசால் தொடங்கப்படும். இதனால், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் வழியாக வைகை அணைக்கு தண்ணீர் சேர்ந்து, அங்கிருந்து குண்டாற்றில் சேரும்.

கேள்வி:-  காவல் துறையில் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கியதில் ரூபாய் 350 கோடி ஊழல் நடந்துள்ளதென்று ஸ்டாலின் கூறியுள்ளாரே?
பதில்:- நான் பதவி ஏற்ற காலத்திலிருந்தே குற்றச்சாட்டுக்களை மட்டுமே கூறிக் கொண்டிருக்கின்றார். என் மீதே வழக்கு போட்டிருந்தார். வேண்டுமென்றே, திட்டமிட்டு, பொய்யான வழக்குளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கூயஅடை சூயனர சுடியன ளுநஉவடிச ஞசடிதநஉவ-ல் ஏற்கனவே ஊழல் நடந்ததாக சொன்னார்கள். ஆனால், உச்சநீதிமன்றம் தடையாணை கொடுத்துள்ளது. ஒவ்வொரு திட்டத்தைப் பற்றியும் குறை கூறிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய ஆட்சியில் எவ்வளவு முறைகேடுகள் நடந்துள்ளன என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். குறிப்பாக வீராணம் ஊழல். ஆனால் அம்மா புதிய வீராணம் திட்டத்தை நிறைவேற்றி சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கினார்.
கேள்வி:- சேலம் - மதுரை மெயின் ரோடு பல ஆண்டு காலமாக மிகவும் சேதமடைந்துள்ளதே?
பதில்:- இப்பொழுது பணி தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டப் பணிக்கு ரூபாய் 247 கோடி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டப் பணிக்கு மத்திய அரசு இசைவளித்திருக்கிறது. அதற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டவுடன் பணிகள் தொடங்கும்.
கேள்வி:- இந்த முறையும் உபரி நீர் வீணாகக் கடலில் சேர்ந்துள்ளதே?
பதில்:- நம்முடைய நிலப்பரப்பு சமவெளியாக இருப்பதினால் உபரி நீரை அதிகமாக சேமிப்பதில் சிரமம் இருக்கின்றது. இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் தான் அதிகளவு தண்ணீரை சேமிக்க முடியும். ஆனால், சமவெளிப் பரப்பில் அரை டி.எம்.சி முதல் ஒரு டி.எம்.சி. வரை தான் தண்ணீரை சேமிக்க முடியும். அதற்கே ரூபாய் 600 கோடி வரை செலவாகும். அதுமட்டுமல்லாமல், 4 அல்லது 5 இடங்களில் தான் தண்ணீரை தேக்கக்கூடிய பகுதிகள் இருக்கின்றன. அதற்காகத் தான் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மேட்டூரிலிருந்து கொள்ளிடம் வரை சாத்தியம் உள்ள இடங்களில் தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். உபரி நீரை திருப்பி விட வேண்டுமென்பதற்காகத்தான் மாயனூர் கதவணையிலிருந்து குண்டாறு வரை கொண்டு செல்வதற்கு திட்டம் தீட்டப்பட்டு, பணி தொடங்கவுள்ளது.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, கோரிக்கைகள் வாரியாக பிரிக்கப்பட்டு, கணினியில் பதிவேற்றப்படுகின்றன. கள ஆய்விற்குப் பின், தகுதியான மனுக்களுக்கு தீர்வு அளிக்கப்படும். தகுதியற்ற மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அதற்கான காரணமும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து