முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

370-வது பிரிவு நீக்கத்துக்கு எதிரான மனு: சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இன்று முதல் விசாரணை

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான அரசியலமைப்பின் 370-வது பிரிவை மத்திய அரசு நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று முதல் தனது விசாரணையைத் தொடங்குகிறது.

காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கத்துக்கு எதிரான மனுக்கள், காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செல்ல முடியாததற்கு எதிரான மனுக்கள், குழந்தைகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிரான மனுக்கள் அனைத்தையும் இந்த அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அரசியலமைப்பில் 370-வது பிரிவையும் திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக் ஆகிய பகுதிகளைப் பிரித்து இரு பகுதிகளையும் யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது. இந்த உத்தரவு அக்டோபர் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. எம்.எல் சர்மா எனும் வழக்கறிஞர்தான் முதன் முதலில் வழக்கு தொடர்ந்தார்.

அதைத் தொடர்ந்து தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பிலும், சஜாத் தலைமையிலான மக்கள் மாநாட்டுக் கட்சி, தனிமனிதர்கள் என பலரும் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரணை செய்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரித்தது. இந்த மனுக்கள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படும் என தலைமை நீதிபதி அறிவித்தார்.

அதன்பின் மூத்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையில், நீதிபதிகள் எஸ்கே கவுல், ஆர் சுபாஷ் ரெட்டி, பிஆர் காவே, சூர்யகாந்த் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று  முதல் (செவ்வாய்க்கிழமை) தனது விசாரணையைத் தொடங்குகிறது.

இந்த அமர்வில் 370-வது பிரிவு நீக்கத்துக்கு எதிரான மனுக்கள், காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செல்ல முடியாததற்கு எதிரான மனுக்கள், குழந்தைகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிரான மனுக்கள் அனைத்தையும் விசாரிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து