முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் இதுவரை 10 பேர் சிக்கினர்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் இதுவரையில் 10 பேர் பிடிபட்டுள்ளனர். மேலும் மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரிந்து வருபவர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் சேர்ந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சங்கிலி தொடர்போல சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேசனின் மகனான உதித்சூர்யா மும்பையில் உள்ள தேர்வு மையத்தில் தனக்கு பதில் வேறு ஒரு நபரை தேர்வு எழுத வைத்து வெற்றி பெற்று மோசடியாக தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த சம்பவம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெளிச்சத்துக்கு வந்தது.

இதுபற்றி தெரிய வந்ததும் தப்பி ஓடிய உதித்சூர்யா தந்தையுடன் திருப்பதியில் கைது செய்யப்பட்டார். இவர்கள் 2 பேரிடமும் நடத்திய விசாரணையில் நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடி தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மாணவர் உதித்சூர்யாவும், அவரது தந்தை வெங்கடேசனும் அளித்த வாக்குமூலத்தில் நீட் தேர்வில் மேலும் 4 மாணவர்கள் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு இருந்ததாக தெரிவித்தனர். இதன் அடிப்படையில் காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மாணவர் பிரவின், அவரது தந்தை சரவணன், குரோம்பேட்டை பாலாஜி மருத்துவக் கல்லூரி மாணவர் ராகுல், அவரது தந்தை ஜெகதீஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருப்போரூர் சத்யசாய் மருத்துவக் கல்லூரி மாணவி அபிராமி, அவரது தந்தை மாதவன் ஆகியோர் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் உள்ளனர்.

இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேடு வழக்கில் தொடர்புடைய 5-வது மாணவரான வாணியம்பாடியைச் சேர்ந்த இர்பான், தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவது தெரிய வந்தது.

அவரை தேடி சென்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மொரீசியஸ் நாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இர்பானின் சொந்த ஊரான வாணியம்பாடிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இர்பானின் தந்தையும், டாக்டருமான முகமது ஷபி கைது செய்யப்பட்டார். அவரை வைத்து இர்பானை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அதன்படி முகமது‌ ஷபியை செல்போனில் இர்பானிடம் பேச வைத்தனர்.

அப்போது மாணவர் இர்பான் சேலத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலம் தீவட்டிபட்டி அருகில் டேனீஸ்பேட்டையில் அவரை கைது செய்தனர்.  

பின்னர் மாணவர் இர்பானும், அவரது தந்தை முகமது‌ ஷபியும் தேனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ஆள் மாறாட்டம் தொடர்பாக இருவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆள் மாறாட்டத்துக்காக மாணவர் உதித் சூர்யா ரூ.20 லட்சம் பணம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்து இருந்தார். மற்ற மாணவர்களும் இதே போன்று தரகர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை வழங்கியதாக தெரிவித்து இருந்தனர்.
இவர்களைப்போல இர்பானும் பணம் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் இதுவரையில் 10 பேர் பிடிபட்டுள்ளனர். நீட் தேர்வு மோசடியில் பயிற்சி மையங்கள் மூலமாகவே தரகர்கள் ஆள் மாறாட்டத்துக்கு ஆட்களை தேர்வு செய்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த ஜோசப் போலீசின் பிடியில் சிக்கியதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் கைதானது பற்றி இதுவரை போலீசார் எந்த தகவலையும் வெளியிடாமலேயே உள்ளனர்.

அவரை போன்று மேலும் பல தரகர்கள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் ரசீத் என்ற இன்னொரு தரகரும் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரும் ஆள் மாறாட்டத்துக்கு பெரிதும் உதவி செய்து உள்ளார். அவரை பிடிக்கவும் வலை விரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னை குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவ கல்லூரி முதல்வர் சிவக்குமார், காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி முதல்வர் சுந்தரம், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் சத்யசாய் மருத்துவ கல்லூரி முதல்வர் பிரேம்நாத் ஆகியோரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பி தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவித்து இருந்தனர். இதனை ஏற்று 3 பேரும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

தர்மபுரி மருத்துவக் கல்லூரி முதல்வரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. 

நீட் ஆள் மாறாட்ட விவகாரத்தில் மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நீட் விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து