முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனி நபர் வருமான வரி விகிதங்களை குறைக்க மத்திய அரசு திட்டம்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : கார்ப்பரேட் வரி விகிதம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

கடந்த செப்டம்பர்  20-ம் தேதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதங்களை 30 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்தார். அதே நேரத்தில் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த விகிதம் 25 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை குறைக்கப்பட்டது. மத்திய தர வர்க்கத்தினரிடையே நுகர்வை அதிகரிக்கச் செய்து, பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் வருமான வரி விதிப்பு அடுக்குகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போதுள்ள வருமான வரிச் சட்டத்தை மறுஆய்வுக்கு உட்படுத்தி, நாட்டின் பொருளாதாரத் தேவைக்கு ஏற்ப, புதிய சட்டத்தை இயற்றுவது குறித்து பரிந்துரைப்பதற்காக, நேரடி வரி தொடர்பான பணிக்குழு கடந்த 2017-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த ஆய்வுக்குழு, கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி மத்திய அரசுக்கு தாக்கல் செய்த அறிக்கையில், வருமான வரி விதிப்பு அடுக்குகளை நான்கிலிருந்து ஐந்தாக உயர்த்தவும், சில அடுக்குகளுக்கு வருமான வரி விகிதத்தை குறைக்குமாறும் பரிந்துரைத்திருந்தது.

இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், வருமான வரி சட்டங்களை எளிமைப்படுத்துவது, வருமான வரி விகிதங்களை குறைப்பது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. வருமான வரி செலுத்துபவர்களுக்கு குறைந்தது 5 சதவீதம் அளவுக்கு பயனளிக்கும் வகையில் மாற்றங்கள் இருக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது 2.5 லட்ச ரூபாய் வரை உள்ள வருமானத்திற்கு வரி விதிக்கப்படுவதில்லை.

3 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரை உள்ள வருமானத்திற்கு, 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. 5 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான இரண்டாவது அடுக்கிற்கு 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது. 10 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீத வரி அடுக்கை கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பிரிவுக்கு 20 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில், அதை 10 சதவீதமாகக் குறைப்பதுதான் திட்டம். இதே போல உயர் வருவாய் பிரிவினருக்கு வருமான வரி அடுக்கை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பது, மேல்வரி, கூடுதல் வரிகளை நீக்குவது போன்ற திட்டங்களையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தீபாவளிக்கு முன்னரே, வருமான வரி விதிப்பில் மாற்றங்களை மத்திய அரசு அறிவிக்கும் என வல்லுநர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஜூன் காலாண்டில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக 5 சதவீதமாக குறைந்தது. இது ஐந்தாவது தொடர்ச்சியான காலாண்டு வளர்ச்சியாகும்.

வருமான வரி விகிதத்தை குறைப்பதால், வரி செலுத்துபவர்களின் கையில் கூடுதல் பணம் நிற்கும் என்றும், இது உடனடியாக தேவையையும் நுகர்வையும் அதிகரிக்கச் செய்யும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கார்ப்பரேட் வரி விகிதங்களை குறைத்தது, உற்பத்தித்துறைக்கு பேருதவியாக அமைந்தது என்றும் ஆனால் இது மட்டுமே நுகர்வோர் மத்தியில் தேவையை அதிகரிக்கச் செய்யாது என்பதால், வருமான வரி குறைப்பு அவசியம் என்றும் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். பொருளாதாரத்தை ஊக்குவிக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ள அரசு, தனிநபர் வருமான வரி செலுத்துபவர்களுக்கும் பயன்தரும் வகையில் நடவடிக்கை எடுப்பது, பொருளாதாரத்தை மேலும் ஊக்குவிக்கும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. வருமான வரி உச்சவரம்பை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பது முக்கியமான நடவடிக்கையாக கை கொடுக்கும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து