முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி- சீன அதிபர் மாமல்லபுரம் வருகை : பலமான கட்டுமானத்துடன் வரவேற்பு பேனர் வைக்கலாம் -மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் அனுமதி

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்று பேனர்கள் வைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.  

இந்தியா-சீனா இடையே வர்த்தக உறவு உள்பட இரு நாடுகளுக்கும் நட்புணர்வை மேம்படுத்தும் வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகிற 11-ந்தேதி சென்னை வர உள்ளார். சென்னை மாமல்லபுரத்தில் அவர் 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை இந்திய நாட்டின் விருந்தினராக தங்கி இருப்பார். அப்போது அவரை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

சீனாவில் இருந்து நேரடியாக சென்னை வரும் சீனா அதிபர் ஜி ஜின்பிங்குக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் மாமல்லபுரத்துக்கு அழைத்து செல்லப்படுவார்.

இதை கருத்தில் கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரதமர் மோடியையும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் வரவேற்று பேனர்கள் வைக்க மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசின் வெளியுறவுத் துறையும், தமிழக அரசின் செய்தி, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறையும் செய்து வருகின்றன.

இதற்கிடையே சென்னையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசியல் தலைவர்களை வரவேற்று பேனர்கள் வைக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்த்து. கடந்த மாதம் சென்னை பள்ளிக்கரணை அருகே  ஜெயகோபால் என்பவர் வைத்திருந்த பேனர் விழுந்ததில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ லாரியில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.  

இந்த சம்பவம் தமிழக மக்களின் மனதை உலுக்கும் வகையில் இருந்தது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து இதுபற்றி விசாரணை நடத்தி பேனர் வைப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

பேனர் வைப்பதை தடுக்காத மாநகராட்சி மற்றும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சென்னை முழுவதும் அதிரடியாக பேனர்கள் அகற்றப்பட்டன. பேனர்கள் வைக்க தடை விதிக்கும் உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது.

இதன் காரணமாக பிரதமர் மோடியையும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் வரவேற்று பேனர்கள் வைப்பதில் சிக்கல் உருவானது. இதையடுத்து மத்திய அரசின் வெளியுறவு துறை சார்பிலும் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் பேனர் வைக்க அனுமதி கேட்டு வழக்கு தொடரப்பட்டது.

தமிழக அரசின் நகராட்சி நிர்வாக துறை ஆணையர் பாஸ்கரன் இதற்கான மனுவை தாக்கல் செய்தார். மத்திய-மாநில அரசுகள் தங்களது மனுக்களில், “மோடியையும் ஜி ஜின்பிங்கையும் வரவேற்று வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட வேண்டியது உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை 14 இடங்களில் பேனர் வைக்க திட்டமிட்டுள்ளோம்.

அக்டோபர் 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 5 நாட்களுக்கு மட்டும் இந்த பேனர்களை வைக்க அனுமதி அளித்தால் போதும். வெளிநாட்டு அதிபரை வரவேற்க வேண்டிய அவசியம் இருப்பதால் அதை கருத்தில் கொண்டு பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும், “பேனர்கள் வைக்க கூடாது என்ற கோர்ட்டின் உத்தரவு அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தும். எனவே இரு நாட்டு தலைவர்களை வரவேற்று பேனர்கள் வைக்க  அனுமதி வழங்க வேண்டும்” என்றும் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டது.

அந்த மனுக்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷாயி இருவரும் இந்த மனுக்கள் மீது 3-ந்தேதி நேற்று விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவதாக கூறி இருந்தனர். அதன்படி இந்த வழக்கில்  நேற்று  நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அதன் விவரம் வருமாறு:-

பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வரவேற்பு பேனர்கள் வைக்க அனுமதிக்கப்படுகிறது. பேனர்கள் வைப்பதற்கான விதிகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு வரவேற்பு பேனரும் உரிய அஸ்திவாரங்களுடன் பலமான கட்டுமானத்துடன் வைக்க வேண்டும். விதிகளை மத்திய-மாநில அரசுகள் கடைபிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

 விதியை மீறி பேனர் வைக்க மாட்டோம் என்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது அரசியல் கட்சிகளுக்கு மட்டும்தான். அரசுகளுக்கு அல்ல. எனவே மத்திய-மாநில அரசுகள் இதை உணர்ந்து பேனர் வைக்கும் விவகாரத்தில் உரிய விதிகளை பின்பற்ற வேண்டியது முக்கிய கடமையாகும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து