முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்தியடிகளை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

காந்தியடிகளை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

மகாத்மா காந்தியின் பிறந்த தினமான கடந்த  2-ம் தேதி சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில் உலகம் முழுவதும் அகிம்சை தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காந்தியடிகளின் நினைவை போற்றும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் செனட் சபையில் உறுப்பினர்கள் டெட் குரூஸ், ராபர்ட் மெனன்டெஸ் ஆகியோர் இந்த தீர்மானத்தை அறிமுகம் செய்தனர்.

அதில், இங்கிலாந்திடம் இருந்து இந்தியா விடுதலை பெறுவதற்காக ஆண்டுக்கணக்கில் காந்தியடிகள் நடத்திய விடுதலை போராட்டத்தை இந்த தீர்மானம் அங்கீகரிக்கிறது. அரசியல் மாற்றத்துக்காக அவர் மேற்கொண்ட முன்னோடி அகிம்சை போராட்டங்கள் கோடிக்கணக்கான இந்தியர்களின் விடுதலைக்கு உதவியதுடன், உலகம் முழுவதிலும் மார்ட்டின் லூதர் கிங் போன்ற ஏராளமானோருக்கு உத்வேகமாகவும் அமைந்திருக்கிறது என்று கூறப்பட்டு இருந்தது. மேலும், சர்வதேச அகிம்சை தினத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இந்த தீர்மானம் ஆதரவு அளிப்பதுடன், அனைத்து அமெரிக்கர்களும் இதை கடைப்பிடிக்கவும் தீர்மானம் அழைப்பு விடுக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த தீர்மானத்தை தாக்கல் செய்து டெட் குரூஸ் பேசும் போது, அதிருப்தியை அமைதியாக வெளிப்படுத்தும் காந்தியின் நிகரில்லா அர்ப்பணிப்பு, இந்தியர்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் எண்ணற்றவர்களுக்கும் உத்வேகம் அளித்து வருகிறது. அவரது வாழ்வு, தியாகம், மரபு போன்றவை உலகுக்கு ஒளியாக தொடர்கிறது. கொடுங்கோன்மை மற்றும் அநீதியை ஏற்படுத்தும் சர்வாதிகாரிகளுக்கு எச்சரிக்கையை அளிக்கிறது. அவரை தொடர்ந்து கவுரவிப்பதுடன், விடுதலை நாடுவோருக்கும் ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்தார்.

இதை போல பிரதிநிதிகள் சபையிலும் காந்தியடிகளை கவுரவிக்கும் தீர்மானத்தை பெண் உறுப்பினர் கிரேஸ் மெங் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், காந்தியடிகள் ஒரு புகழ் பெற்ற சமூக உரிமை ஆர்வலராகவும், சிறந்த ஆன்மிக தலைவராகவும் இருந்தார். அமைதியான போராட்டங்கள் மூலம் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டினார். உலகிற்கு அவர் அளித்த முக்கியமான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையிலான இந்த தீர்மானம் மூலம் அவரை நாம் பெருமைப்படுத்துவோம் என்று தெரிவித்தார். காந்தியடிகளின் பெருமையை போற்றும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு உள்ள தீர்மானத்துக்கு எம்.பி.க்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக பல எம்.பி.க்களும் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து