முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைக்கால டிவிடெண்ட் தொகையாக ரூ.30,000 கோடியை கேட்டதா மத்திய அரசு: ரிசர்வ் வங்கி கவர்னர் பதில்

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2019      வர்த்தகம்
Image Unavailable

ரிசர்வ் வங்கியிடமிருந்து இடைக்கால டிவிடெண்டாக ரூ. 30 ஆயிரம் கோடியை மத்திய அரசு கோரியதாக தகவல் வெளியான நிலையில் இதுபற்றி எதுவும் தெரியாது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார்.

நாட்டின் நிதி நிலையை ஸ்திர நிலையில் வைத்திருக்க மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி தனது கையிருப்பை வலுப்படுத்தி வந்துள்ளது. ஆனால், தேவையான அளவை விட அதிகமான உபரி நிதி ரிசர்வ் வங்கி வசம் இருப்பதாகவும், அந்த நிதியை அரசுக்கு வழங்கினால் பயனுள்ள வகையில் திட்டங்களைச் செயல்படுத்த உதவும் எனவும் கூறப்பட்டது. ரிசர்வ் வங்கி உபரி நிதியை வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைபடி, மத்திய அரசுக்கு முதல்கட்ட உபரி நிதியை இந்த நிதி ஆண்டில் வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ரூ.1,76,051 கோடியை மத்திய அரசுக்கு வழங்குவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அரசு பல்வேறு வரி குறைப்பு நடவடிக்கைகளை எடுத்திருப்பதால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க வேறு வழிகளைத் திட்டமிட்டு வருவதாகவும், அதன் ஒருபகுதியாக ரிசர்வ் வங்கியிடமிருந்து இடைக்கால டிவிடெண்டாக ரூ. 30 ஆயிரம் கோடியை பெற முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

இது குறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்ததாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியதாவது:-இதுபற்றி நானும் ஊடங்களில் தான் பார்த்தேன். இதை தவிர இடைக்கால டிவிடெண்ட் தொகையை மத்திய அரசு கேட்டதாக எந்த தகவலும் எனக்கு வரவில்லை எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து