முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் கொள்ளையர்கள் தப்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம் மூலம் கொள்ளையர்கள் தப்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் தனியார் ஓட்டலில் தகவல் தொழில் நுட்பம் மூலம் மக்களை ஒருங்கிணைப்பது தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

நமது தாத்தா, பாட்டி காலத்தில் தகவல் பரிமாற வேண்டுமென்றால் தபால் அட்டையில் செய்தி எழுதி அனுப்பி அது சம்மந்தப்பட்டவர்களுக்கு கிடைக்க 15 நாட்கள் வரை ஆகும். ஆனால் தற்போது அமெரிக்காவில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்தால் அடுத்த நொடியே வீடியோவுடன் நமக்கு தெரிய வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தில் உள்ள கால அவகாசத்தில் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும் என மனிதர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். வீட்டில் இருந்தவாறே அரசு சலுகைகள், சான்றிதழ் பெற வேண்டும் என மக்கள் எண்ணுகின்றனர். அந்த வகையில் தற்போது அதனை மக்கள் வீட்டிலிருந்தவாறே பெற தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துள்ளது.

தமிழக அரசு சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், மனை பட்டா, பட்டா மாற்றம், பிறப்பு இறப்பு சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி வருகிறது . அதன்படி ஆன்லைன் மூலம் 2 கோடி பேர் சான்றிதழ்களை தமிழகத்தில் பெற்றுள்ளனர். அதே போன்று TNSMRT என்ற ஆப்பை அறிமுகப்படுத்திய பெருமை தமிழக அரசின் ஓய்வு பெற்ற வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலை சாரும். இந்த ஆப் தற்போது ஐ.நா.சபை கூட்டத்தில் கூட பாராட்டு பெறக் கூடிய அளவிற்கு சாதனை படைத்துள்ளது. உலகில் உள்ள 130 கோடி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றால் அது தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் மட்டுமே சாத்தியம்.

கடந்த காலங்களில் பள்ளிகளில் மாணவர் பதிவேடு எடுக்க சுமார் 15 நிமிடங்கள் வரை தேவைப்படும். தற்போது மாணவர்களின் முகத்தை காட்டினாலே அரசு பள்ளிகளில் வருகை பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் கிடைக்கின்றன. அந்த அளவிற்கு தகவல் தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் இந்த அளவிற்கு தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு இன்றைய தலைமுறையினரே காரணம், ஆகவே அவர்களை பாராட்ட வேண்டியது அரசின் கடமை.

கடந்த இருபதாண்டுகளுக்கு முன்பு ஒரு குற்றம் நடந்தால் குறிப்பிட்ட போலீஸ் நிலையத்தில் உள்ள ரைட்டர் மேலதிகார்களுக்கு அய்யா என்று விளித்தபடி கடிதம் எழுதுவார். அந்த கடிதம் குறிப்பிட்ட மேலதிகாரிகளுக்கு கிடைப்பதற்குள் அந்த கொள்ளையர்கள் வடமாநிலத்திற்கு தப்பி ஓடி விடுவார்கள். ஆனால் இப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. ஒரு குற்றம் நடந்ததும் அங்கு எப்படி கொள்ளை நடந்தது, ஓட்டை போடப்பட்டது எப்படி, கொள்ளையர்கள் நுழைந்தது எவ்வாறு என்பது பற்றி வாட்ஸ் அப் மூலம் உடனடியாக வந்து விடுகிறது. வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம் மூலம் கொள்ளையர்கள் தப்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

தகவல் தொழில் நுட்பத்துறைக்கு பல்வேறு முகங்கள் உண்டு. சுகாதாரத்துறை, சமூகநலத்துறை, காவல்துறை என்று அனைத்து துறைகளுக்கும் எங்கள் முகங்கள் இருக்கின்றன. எங்களை போன்ற அரசியல் வாதிகளுக்கும் தகவல் தொழில்நுட்ப மேம்பாடு மிகப்பெரிய வரபிரசாதமாகும். அமைச்சர் எங்கே இருக்கிறார் என்பதை செல்போன் மூலம் உடனடியாக தெரிந்து கொள்ள முடிகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், நான் உள்ளிட்ட அமைச்சர்களும் அமெரிக்காவுக்கு சென்றிருந்தோம். நாங்கள் அமெரிக்காவின் கலிப்போர்னியாவில் இருந்த போது பல்வேறு தகவல்கள் வாட்ஸ் அப் மூலம் உலகம் மூலம் சென்றடைந்தது கலிபோர்னியாவில் போக்குவரத்து விவரங்களை கூகுள் மூலம் அறிய முடிகிறது. இந்த பக்கம் வாகனங்களை இயக்கி சிக்கி கொள்ளாதீர்கள். அங்கு போலீசார் இருக்கிறார்கள் என்று கூகுள் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்காவிலும் நம்ம ஊர் இட்லியும், சாம்பாரும் கிடைக்கிறது. கலிபோர்னியாவில் தமிழர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். அங்கு முக்கியமான தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரம் பேரில் ஐநூறு பேர் நம்முடைய தமிழர்கள் என்று நமக்கு கிடைத்த பெருமையாகும். இன்றைக்கு மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கீழடி குறித்த ஆய்வு தகவல்கள் தகவல் தொழில்நுட்பம் மூலம் நமக்கு உடனடியாக வந்து சேர்கிறது.

தற்போது மனிதன் அனைத்தும் எளிமையாகவும், விரைவாகவும், உடனடியாகவும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறான். மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய இடத்தில் அரசு உள்ளது. ஆகவே தகவல் தொழில் நுட்பத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி மீண்டும் செல்ல வேண்டியது கட்டாயமாகிறது. அந்த வகையில் தமிழக அரசு தகவல் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அதன் மூலம் தொடர்ந்து தமிழகம் தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பல்வேறு துறைகளில் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்த சேவையாற்றிய அரசு முதன்மை செயலாளர்கள் ககன்தீப்பேடி ( வேளாண்மைத்துறை) மதுமது( சமூகநலத்துறை) கூடுதல் டிஜிபி கந்தசாமி ( காவல்துறை) ஆகியோருக்கு விருதுகளை வழங்கி அமைச்சர் உதயகுமார் பாராட்டினார்.

இந்திய தொழில்வர்த்தக மேம்பாட்டுக்கழகத்தின் தலைவர் கவிதா தத் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மை செயலாளர் சந்தோஷ்பாபு, மின்னணு நிர்வாக ஆணையர் சந்தோஷ் மிஸ்ரா, எல்காட் மேலாண் இயக்குனர் விஜயகுமார், ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள், தகவல் தொழில்நுட்பத்துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து