முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாங்காங்கில் விடிய விடிய போராட்டம்: போலீஸ்காரரை தீயிட்டு கொளுத்த முயன்ற போராட்டக்காரர்கள்

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

ஹாங்காங் : ஹாங்காங்கில் விடிய விடிய நடந்த போராட்டத்தில் போலீஸ் மீது போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரணை செய்யும் விதமாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.  இந்த சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து மசோதா கைவிடப்பட்டது. ஆனாலும், ஹாங்காங்கின் தன்னாட்சியில் சீனா தலையிடுவதை நிறுத்துதல், சுதந்திரமாக தேர்தல், போராட்டக்காரர்களை தாக்கிய போலீசார் மீது விசாரணை மேற்கொள்ளுதல், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள போராட்டக்காரர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்தல் போன்ற கோரிக்கைகளுடன் நான்கு மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் தங்கள் அடையாளங்களை போலீசார் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக முகங்களில் முகமூடி அணிந்து கொண்டு போராடி வருகின்றனர். இதற்கிடையில், ஹாங்காங்கில் முகமூடி அணிந்து போராடுவதை தடை விதிக்கும் வகையில் அவசர சட்டதை நகர தலைமை நிர்வாகி கேரி லாம் அமல்படுத்தினார்.

இந்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய, விடிய போராட்டம் நடைபெற்றது. முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் சீனாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக செயல்பட்டு வந்த கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்தினர்.  பின்னர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினர். இதையடுத்து ஹாங்காங்கில் ரயில் சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.  இந்நிலையில், சாலையில் திரண்ட போராட்டக்காரர்கள் கார் ஒன்றை நிறுத்தி அதில் பயணித்த சீருடை அணிந்த போலீஸ் ஒருவரை திடீரென தாக்கினர். மேலும், அவரை தீயிட்டு கொளுத்தவும் முற்பட்டனர். இதில் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய போலீஸ் போராட்டக்காரர்களை நோக்கி தனது துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 14-வயது நிரம்பிய சிறுவன் படுகாயமடைந்ததாகவும் அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து