முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறக்குமதி செய்யப்பட்ட காங்கிரஸ் வேட்பாளரை புறக்கணியுங்கள் - நாங்குநேரியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

களக்காடு : சென்னையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காங்கிரஸ் வேட்பாளரை புறக்கணித்து உள்ளுர் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள் என்று நாங்குனேரி தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காளக்காடு பகுதியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். நேற்று களக்காடு பல்வேறு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு அமைச்சர் வாக்கு சேகரித்தார். பின்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும் போது,

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் அ.திமுக வேட்பாளருக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. நாங்குநேரியில் கஷ்டப்பட்டு உழைத்த நபருக்கு அ.தி.மு.க.வில் சீட் வழங்கப்பட்டுள்ளது. கட்சியை நம்பி, வாக்காளர்களை நம்பி அ.தி.மு.க. வேட்பாளர் களத்தில் நிற்கிறார். ஆனால் பணத்தை மட்டுமே நம்பி காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகின்றார். பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பிறந்து சென்னையில் குடியிருந்து வரும் நபருக்கு நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி சீட் கொடுத்துள்ளது. நாங்குநேரி தொகுதிக்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது..வெளியூர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி நாங்குநேரியில் களத்தில் இறங்கியுள்ளது. எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை தருகிறேன் என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பேசியுள்ளார். அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளை நம்பி, எடப்பாடியார் நல்லாட்சியை அங்கிகரிக்கும் வகையில் வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.

நாங்குநேரி தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. வசந்தகுமார் உறவினர் என்ற காரணத்துக்காக காங்கிரல் வேட்பாளருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. உள்ளுர் தொகுதியில் வசிக்கும் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிப்போம் என்றும் வெளியூர் வேட்பாளரை தேடி செல்ல முடியாது என்றும் வாக்காளர்கள் என்னிடத்தில் சொன்னார்கள். களக்காடு பகுதியில் பல்வேறு குடிநீர் திட்டப் பணிகளை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. வசந்தகுமார் நாங்குநேரி தொகுதியில் எந்த ஒரு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்யவில்லை. தமிழகம் முழுவதிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் எல்லா மாவட்டத்திற்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்த ஒரே முதல்வர் எடப்பாடியார் மட்டுமே. ஒவ்வொரு கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று அரசின் திட்டங்களை அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தொகுதிக்குள் விடாத நிலை இருந்தது. தற்போது அமைச்சர்கள் தொகுதியில் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு கேட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். எஸ்.ஐ. கொலை செய்யப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அப்போதைய தி.மு.க. அமைச்சர் கண்டும் காணாததுபோல் சென்றதை தமிழக மக்கள் அறிவார்கள். காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவரது தலைவர் பதவியை ஆறு மாதங்கள் தக்க வைக்கும் நோக்கில் அமைச்சர்கள் மீது வீண்பழி சுமத்தி வருகின்றார். நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் மாபெரும் வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார். சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மற்றும் களக்காடு அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து