வெற்றி மேல் வெற்றி பெற்று மகிழ்வுடன் வாழ இ.பி.எஸ். - ஓ.பி.எஸ் ஆயுத பூஜை வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2019      தமிழகம்
cm eps - deput cm ops 2019 09 01

சென்னை : வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வேண்டும் என்று ஆயுத பூஜையையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழக துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களின் இறுதியில், ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமித் திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது புனித வழியில், எங்களது உளங்கனிந்த இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலை தெய்வமென மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி, தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் வைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜைத் திருநாளாகும். அழிவு இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும், மனத்திட்பத்தோடு துணிவைத் தரும் மலைமகளையும், செல்வங்களை அள்ளித் தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும். அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியினை பூஜிக்கும் திருநாளாகவும்; விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையிலும், மக்கள் அனைவரும் அன்னை மகா சக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளாகவும் விஜயதசமி திருநாளை கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இத்தகைய சிறப்பு மிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளில், அன்னையின் அருளால் மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு முதல்வரும், துணை முதல்வரும் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து