முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியியல் கல்வி நிலையங்களில் குறைந்த வருகை பதிவு கொண்ட மாணவர்கள் தேர்வெழுத அனுமதி: மத்தியஅரசு திட்டம்

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

பொறியியல் கல்வி நிலையங்களில் குறைந்த வருகைப்பதிவு கொண்ட மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க மத்திய அரசு திட்டமிட் டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து தொழில் கல்வி நிலையங்கள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்கள் இறுதித் தேர்வை எழுத குறிப்பிட்ட வருகைப்பதிவு அவசியமாகும். இந்த நிலையை மாற்றி குறைந்தபட்ச வருகைப் பதிவு இல்லாத மாணவர்களையும் தேர்வு எழுத மத்திய அரசு அனுமதிக்க உள்ளது. இதற்கான உத்தரவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அனுப்ப உள்ளது. நாட்டின் அனைத்து பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை நிர்வகித்து வரும் ஏ.ஐ.சி.டி.இ. இதற்கான முடிவை எடுத்துள்ளது. இதன்படி, கல்விக் காலங்களில் தொழில் முனை வோராக விரும்புவோர், ஸ்டார்ட் அப் தொழிலுக்கு முயல்வோர், புதிய தொழிலுக்கான ஆய்வு செய்வோர் போன்ற மாணவர்கள் குறைந்த அளவு வருகைப்பதிவு வைத்திருந்தாலும் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால், கல்விக்கு பின் மாணவர்கள் வேலை தேடுபவர்கள் என்ற நிலை மாறி, வேலை அளிப்பவர்கள் என்றாகி விடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் கூறும் போது, கல்வி பயிலும் போதே தொழிலில் முனைப்பு காட்டும் மாணவர்களுக்காக இந்த திட்டம் அமலாக்கப்பட உள்ளது. இதற்காக பேராசிரியர்கள் குழு அமைத்து நாட்டின் தொழில் கல்வி நிலையங்கள் மாணவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். இது ஒரு பருவம் அல்லது ஒரு வருடம் எனக் கூட இருக்கலாம். இந்த இடைவெளியில் மாணவர்கள் தம் தொழிலில் கவனம் செலுத்திய பின் தன் கல்வியை தொடரலாம் எனத் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து