முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7-வது இரட்டைச் சதம்: சச்சின், சேவாக் சாதனைகளை முறியடித்தார் கோலி

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புனே : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததன் மூலம் டெண்டுல்கர் மற்றும் சேவாக் சாதனைகளை விராட் கோலி முறியடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் நேற்று புனே நகரில் தொடங்கியது. முதல்நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலியும் , ரகானேவும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. ரகானேவும், கோலியும் ஆட்டத்தை தொடர்ந்தனர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 26 வது சதத்தை பதிவு செய்தார். மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து ரகானே 59 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 7-வது இரட்டைச் சதத்தை பதிவு செய்தார். மேலும் 7 முறை இரட்டைச் சதம் அடிக்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் இருவரின் சாதனையையும் முறியடித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் மற்றும் சேவாக் இருவரும் முறையே தலா 6 இரட்டைச் சதங்கள் விளாசியுள்ளனர். சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 இரட்டைச் சதங்களும், சேவாக் 104 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 6 இரட்டைச் சதங்களும் அடித்துள்ளனர். ஆனால் விராட் கோலி தனது 81-வது டெஸ்ட் போட்டியிலேயே அவர்கள் இருவரது சாதனையையும் முறியடித்துள்ளார். 81 போட்டிகள் விளையாடியுள்ள கோலி தனது 41 டெஸ்ட் போட்டிகள் வரை இரட்டைச் சதத்தை ருசிக்கவேயில்லை. ஆனால் அடுத்து விளையாடிய 41 போட்டிகளில் 7 இரட்டை சதங்கள் அடித்து வியக்க வைத்துள்ளார். இந்த 7 இரட்டைச் சதங்களுமே விராட் கோலி கேப்டனாக செயல்பட்ட போட்டிகளில் அடிக்கப்பட்டவை என்பது மற்றுமொரு சிறப்பு.

கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் 150 ரன்களுக்கு மேல் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். இதுவரை 9 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்துள்ள கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேனான டான் பிராட்மேனை விடவும் முன்னிலையில் உள்ளார். சச்சின் மற்றும் சேவாக் 6 முறை, ராகுல் டிராவிட் 5 முறை, சுனில் கவாஸ்கர் 4 முறை மற்றும் புஜாரா 3 முறை இந்திய அணிக்காக இரட்டைச் சதமடித்துள்ளனர். உலக அளவில் ஆஸ்திரேலிய வீரரான டான் பிராட்மேன் 12 முறை இரட்டைச் சதமடித்து முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து