முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2021-ம் ஆண்டிலும் அ.தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும் கொல்லைப்புற வழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் ஸ்டாலின் எண்ணம் ஈடேறாது - விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் முதல்வர் ஆவேச பேச்சு

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

விழுப்புரம் : கொல்லைப்புற வழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் ஸ்டாலின் எண்ணம் ஒரு போதும் ஈடேறாது என்றும், வரும் 2021-ம் ஆண்டிலும் அ.தி.மு.க. தான் ஆட்சியை பிடிக்கும் என்றும் விக்கிரவாண்டி தொகுதியில் நேற்று பிரச்சாரத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

உற்சாக வரவேற்பு

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 21-ம் தேதி இடைதேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் 2 தொகுதிகளிலும் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது சூறாவளி பிரச்சாரத்தை துவக்கினார். முதலில் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள முண்டியம்பாக்கத்தில் அவர் பிரச்சாரம் செய்தார். முன்னதாக அவருக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். திறந்த வேனில் நின்றபடி அவர் பிரச்சாரம் செய்தார். அவரது அருகில் அமைச்சர் சி.வி. சண்முகம், அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் இருந்தனர். இந்த பிரச்சாரத்தின் போது முதல்வர் பேசியதாவது,

திமிராக பேசுகிறார்

1989-ம் ஆண்டில் தனது தந்தையின் செல்வாக்கில் எம்.எல்.ஏ. ஆனவர்தான் மு.க. ஸ்டாலின். ஆனால் ஒரு சாதாரண தொண்டன் எம்.எல்.ஏ.ஆவது என்பது மிக கடினம். எங்களை பற்றி மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். அவ்வாறு விமர்சிக்க அவருக்கு என்ன தகுதி உள்ளது. நாங்கள் தந்தையின் நிழலில் பதவிக்கு வரவில்லை. உழைப்பால் வந்தவர்கள். உழைப்பே இல்லாத ஒருவர் மிகவும் திமிராக பேசுகிறார். உண்மைக்கு புறம்பான செய்திகளை பேசி வருகிறார். இந்த ஆட்சி 10 நாளில் போய் விடும் என்றார். ஆனால் 2 ஆண்டுகளாக மிக சிறப்பாக இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே ஸ்டாலினின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. கொல்லைப்புற வழியாக உங்களால் பதவிக்கு வரவே முடியாது. எங்களுக்கு வெறும் 5 எம்.எல்.ஏ.க்கள் தான் அதிகம் இருப்பதாக சொல்கிறார். 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நான் முதலமைச்சராகி இருக்கிறேன்.

நன்மை எதுவும் இல்லை

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் இந்த இயக்கம். இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. ஒரு தொண்டனை கூட அசைத்து பார்க்க முடியாது. எனவே திமிர் பேச்சை ஸ்டாலின் விட வேண்டும். இல்லாவிட்டால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பிற்காலத்தில் கிடைக்காது. தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது. எதுவும் இல்லை.

வழிகாட்டியாக தமிழகம்

இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் முதலிடம் வகிக்கிறது. 48 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியிருக்கிறோம். இது சாதனை இல்லையா? கல்வியின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கல்வியை மையமாக வைத்துதான் பொருளாதாரம் உயரும். அதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். நான் ஒரு விவசாயி. இந்த பகுதி ஒரு விவசாய பகுதி. விவசாயிகளுக்கு பல நன்மைகளை செய்திருக்கிறோம். நீர் மேலாண்மை திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாறப்பட்டு வருகின்றன. முதலில் இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கினோம். பிறகு 2019-ல் 500 கோடியில் 1829 ஏரிகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு இத்திட்டத்திற்கு மேலும் நிதி ஒதுக்கப்படும். இந்தியாவுக்கு வழிகாட்டியாக தமிழகம் திகழ்கிறது.

கோதாவரி - காவிரி இணைப்பு

விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நீரை கொடுக்கும் திட்டம்தான் நீர் மேலாண்மை திட்டம். விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்டவன் நான். அதனால்தான் பொறியாளர்களை நியமித்து தமிழகம் முழுவதும் அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம். ஒரு சொட்டு நீர் கூட வீணாக கூடாது. கோதாவரி, காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கிய அரசு அம்மாவின் அரசு. பயிர் காப்பீட்டு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம். விவசாயிகள் பயிரிடும் காய், பழங்களுக்கு நியாய விலை கிடைக்க உணவு பூங்கா அமைக்கவிருக்கிறோம். ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய அரசு அம்மாவின் அரசு. அம்மா இருந்த போது வழங்கப்பட்ட அரை பவுன் பிறகு ஒரு பவுனாக உயர்த்தப்பட்டது. நிதியுதவியும் அதிகரிக்கப்பட்டது. இப்படி பல சாதனைகள் செய்திருக்கிறோம்.

பொய்யான வாக்குறுதிகள்

ஆனால் தி.மு.க.வினர் நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டார்கள். முழு பூசணி காயை சோற்றில் மறைத்து ஓட்டு வாங்கியவர்கள் இவர்கள்.  விவசாயிகளுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் என்றும் வருடத்திற்கு ரூ. 72 ஆயிரம் தருவோம் என்று கூறி ஓட்டு வாங்கியவர்கள். தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசும் போது, அ.தி.மு.க.வில் ஊழல் என்று கூறியுள்ளார். ஆனால் நான் சொல்கிறேன். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான். அப்போது தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதெல்லாம் வழக்கு போடப்பட்டது. இவர்கள் எப்படி சம்பாதித்தார்கள். பிறக்கும் போதே டாடா, பிர்லாவாக பிறந்தார்களா. எல்லாமே மக்கள் பணம்தானே. ஊழலில் திளைத்த கட்சி தி.மு.க. தி.மு.க. பிரமுகர்கள் பலரும் கல்லூரி கட்டியிருக்கிறார்கள். இதையெல்லாம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 2012-லும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். எனவே பொய் பேசும் இவர்களுக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட  பல்வேறு இடங்களில் அவர் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது பொதுமக்கள் திரண்டு வந்து அவரது பேச்சை ஆர்வமாக கேட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து