முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இடைதேர்தல் வருவதற்கு காங்கிரஸ் கட்சியின் சுயநலம்தான் காரணம் - ரெட்டியார்பட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை : நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இடைதேர்தல் வருவதற்கு காங்கிரஸ் கட்சியின் சுயநலமே காரணம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இடைதேர்தல் ஏன்?

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு அதன் பிறகு இடைதேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொகுதியில் வருகிற 21-ம் தேதி இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக அமைச்சர்கள், அ.தி.மு.க. பிரமுகர்கள் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்து வந்தார்கள். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

முதல்வர் பிரச்சாரம்

நேற்று அவர் நாங்குநேரி தொகுதிக்கு வந்தார். அப்போது அவரை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பிறகு ரெட்டியார்பட்டி பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் திறந்த வேனில் நின்றபடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

நாங்குநேரி தொகுதியில் இடைதேர்தல் வரக்காரணமே காங்கிரஸ் கட்சியின் சுயநலம்தான். இது ஒரு திணிக்கப்பட்ட தேர்தல். நமது வேட்பாளர் நாராயணன் இந்த பகுதியை சேர்ந்தவர். அவர் மக்களின் குறைகளை கேட்பார். ஏற்கனவே இங்கு எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் பெரிய பதவி கிடைத்ததும் ஓடிப் போய் விட்டார். அவர் இந்த தொகுதி மக்களை மறந்து விட்டார். இப்போது இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும் இப்படித்தான். இங்கு அலைகடலென திரண்டிருக்கிறீர்கள். ஏதோ வெற்றி விழா நடப்பது போல் கூடியிருக்கிறீர்கள். நீங்கள் யாரை தேர்ந்தெடுத்தால் நல்லது என்று முடிவு செய்து விட்டு வாக்களிக்க வேண்டும். ரெட்டியார்பட்டி நாராயணன் இங்கே பிறந்து வளர்ந்தவர். அவரை நீங்கள் எளிதில் அணுகலாம். அவர் உங்களுக்கு நன்மை செய்யக் கூடியவர். ஆகவே உங்களுக்கு தேவை நன்மை செய்யும் வேட்பாளரா? அல்லது வெளியூரில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளரா? காங்கிரஸ் வேட்பாளர் ஒரு கோடீஸ்வரர். அவரை நீங்கள் சுலபமாக அணுக முடியாது. எனவே நீங்கள் எளிதில் அணுக கூடிய அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாய்ப்பு தாருங்கள்.

ஸ்டாலின் மீது தாக்கு

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு இடைதேர்தல் வரும் போதுதான் திண்ணை பற்றி ஞாபகமே வரும். இடைதேர்தல் நடக்கும் போது திண்ணையில் வந்து உட்கார்ந்து பிரச்சாரம் செய்வார். பெட்ஷீட் போட்டு உட்கார்ந்து மக்களை ஏமாற்றுவார். உங்களுக்கு என்ன பிரச்சினை என்றெல்லாம் கேட்டு மனு வாங்குவார். இவர் மனு வாங்கி என்ன செய்யப் போகிறார். அந்த மனுவை யாரிடம் தருவார். அந்த மனுக்கள் எல்லாம் குப்பை தொட்டிக்குத்தான் போகும். ஆளும் கட்சி பிரதிநிதியிடம் மனுக்கள் கொடுத்தால் அந்த பிரச்சினை தீரும். சின்ன பிரச்சினை என்றால் அவரிடம் கொடுக்கலாம். பெரிய பிரச்சினை என்றால் அமைச்சர்கள், முதல்வரிடம் கொடுக்கலாம். ஸ்டாலின் மனு வாங்கி என்ன செய்ய முடியும். பாராளுமன்ற தேர்தலின் போது ஏராளமான பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டார். கல்விக் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி என்றெல்லாம் சொன்னார். விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் தருவதாக சொன்னார்கள். வருடத்திற்கு ரூ. 72 ஆயிரம் தருவதாகவும் இவர்கள் சொன்னார்கள். இப்படி பொய்யெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றினார்கள். ஆனால் வேலூர் தொகுதியில் தேர்தல் நடந்த போது மக்கள் உண்மையை புரிந்து கொண்டு விட்டார்கள். இனி மக்களை ஏமாற்ற முடியாது. எனவே உங்களுக்கு நன்மை செய்யக் கூடிய அ.தி.மு.க வேட்பாளருக்கு வாக்களித்து அமோக வெற்றி தேடி தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். பிறகு நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் முதல்வர் எடப்பாடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.

இன்றும் பிரச்சாரம்

நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்ப்பட்டி நாராயணனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சூறாவளி பிரசாரம் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று பிற்பகல் 3 மணிக்கு களக்காடு ஒன்றியத்தில் உள்ள ஏர்வாடி பேரூராட்சியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதையடுத்து திருக்குறுங்குடி பேரூராட்சி, மாவடி, களக்காடு பேரூராட்சி, சிங்கிகுளம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதன் பின்னர் வரும் 18-ம் தேதி மாலை 3 மணிக்கு பாளையங்கோட்டை ஒன்றியத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதைத் தொடர்ந்து முன்னீர்பாளையம், கிருஷ்ணாபுரம், கே.டி.சி.நகர், சீவலப்புரி ஆகிய இடங்களில் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டியில்...

இதற்கிடையே விக்கிரவாண்டியில் வரும் 16-ம் தேதி காணை மற்றும் கோலியனூர் ஆகிய ஒன்றியத்தில் உள்ள 6 இடங்களிலும் 17-ம் தேதி கோலியனூர் ஒன்றியத்தில் உள்ள விராட்டிக்குப்பம், விக்கிரவாண்டி மற்றும் காணை ஒன்றியங்களில் உள்ள தும்பூர், முட்டத்தூர், பனைமலை அன்னியூர் மற்றும் கடையம் ஆகிய இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து