முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டியில் சூறாவளி பிரச்சாரம் ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசி இல்லை: துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேச்சு

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

விழுப்புரம் : ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசி இல்லை என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முத்தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 2 நாட்களாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்து வருகிறார். தனது பிரச்சாரத்தின் போது பேசிய அவர், மாமல்லபுரம் மட்டுமல்ல, தமிழகத்தையே சிங்கப்பூராக மாற்றுவோம் என்று நேற்று முன்தினம் நடந்த பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். நேற்றைய பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது,

விழுப்புரம் மாவட்டம் மீது மறைந்த முதல்வர் அம்மா தனி பாசம் வைத்திருந்தார். இந்த மாவட்டத்தை முன்மாதிரி மாவட்டமாக ஆக்கினார். இந்த மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்காக 72 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 18 ஆயிரம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சி இருந்தது. ஆனால் அப்போது தமிழகத்திற்கு கிடைத்த தொழில் முதலீடுகள் குறைவு. ஆனால் 2011-ல் அம்மா ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் திரட்டப்பட்டன. அம்மா கொண்டு வந்த திட்டங்களை அப்படியே நிறைவேற்றி வருகிறோம். இன்னும் சொல்லப் போனால் கூடுதலாகவே நிறைவேற்றி வருகிறோம். ஏழை பெண்கள் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மகப்பேறு நிதியுதவி ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாளில் அம்மா இருந்த போது பச்சரிசி, வெல்லம் உட்பட பல பொருட்களை கொடுத்தார்கள். ஆனால் இப்போது கூடுதலாக ரூ. ஆயிரமும் கொடுத்திருக்கிறோம். நீங்கள் வாங்கினீர்களா? இல்லையா? என்று கூட்டத்தினரை பார்த்து கேட்டார். அவர்களும் ஆமாம் வாங்கினோம் என்று தெரிவித்தனர். இதை கேட்டு புன்னகைத்தவாறே தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படுவதை சுட்டிக் காட்டினார். தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, கற்பழிப்புதான் நடந்தது என்று கூறிய அவர், மதுரையில் ஒரு நாளிதழில் நடந்த கொடூர சம்பவத்தையும் அதில் 3 உயிர் பலியானதையும் குறிப்பிட்டார். ஸ்டாலினுக்கு தீராத ஆசை முதல்வர் ஆக வேண்டும் என்பது. ஆனால் அவருக்கு அது எந்த காலத்திலும் சரிப்பட்டு வராது. அவருக்கு அந்த ராசி இல்லை. இந்த இயக்கம் ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம். இதில் ஒரு சாதாரண தொண்டன் கூட முதல்வராக முடியும். கட்சி பதவி வகிக்க முடியும். ஆனால் தி.மு.க. வில் அது முடியாது. இப்போது நடப்பது மக்களாட்சி. இங்கே பா.ம.க. தொண்டர்கள் எழுச்சியுடன் கூடியிருக்கிறார்கள். தி.மு.க.வின் டெபாசிட் காலியாகும் அளவிற்கு நீங்கள் கூடியிருக்கிறீர்கள். அதனால்தான் கூட்டத்தை பார்த்து விட்டு ஸ்டாலின் இடையில் ஓடி விட்டார். வன்னியர்களை நினைத்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின். முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்கிறார். இத்தனை நாள் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்? காவிரி பிரச்சினையில் துரோகம் செய்த கட்சிகள் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள். 17 வருடம் கழித்து காவிரி பிரச்சினையில் 2007-ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வந்தது. ஆனால் அந்த தீர்ப்புக்கு அரசாணையை கூட அவர்கள் பெற்றுத்தரவில்லை. அம்மா பல சட்டப்போராட்டங்களை நடத்தி அந்த இறுதி தீர்ப்பை கெஜட்டில் வெளியிட்டார். இப்படி தமிழக மக்களுக்காக பல்வேறு நன்மைகளை செய்தவர் அம்மா. அவரது வழியில் இந்த ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே நமது வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து