முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

17-ம் தேதி அ.தி.மு.க.வின் 48-ம் ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலைகளுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலையணிவிப்பு - தலைமை கழகத்தில் கொண்டாட்டம்

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை  : அ.தி.மு.க.வின் 48-வது ஆண்டு தொடக்க விழா வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலையணிவித்து கட்சிக்கொடியை ஏற்றி வைக்கின்றனர்.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கி 47 ஆண்டுகள் நிறைவடைந்து, வரும் 17-ம் தேதி 48-வது ஆண்டு தொடங்குவதை கொண்டாடும் வகையில் அன்று காலை 10 மணிக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து, அ.தி.மு.க. கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக  நிர்வாகிகள் , அமைச்சர்கள் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள்.

அ.தி.மு.க.வின் 48-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, 17-ம் தேதி ஆங்காங்கே அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கும், அவர்களதுபடங்களுக்கும் மாலை அணிவித்து, அ.தி.மு.க. கொடிக்கம்பங்களுக்கு புதுவண்ணம் தீட்டி கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதே போல், அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17-ம்தேதி ஆங்காங்கே அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கும், உருவ படங்களுக்கும் மாலை அணிவித்து, கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து