Idhayam Matrimony

நீர்வள ஆதாரம் மற்றும் பொதுப்பணித் துறைகளின் கீழ் ரூ. 25.16 கோடியில் கட்டப்பட்டுள்ள முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் 24 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தருமபுரி மாவட்டத்தில் புனரமைக்கப்பட்ட மாரியம்மன் கோவில் பள்ளம் அணைக்கட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் மற்றும் பெண்டறஹள்ளி கிராமங்களில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள், திருவண்ணாமலை மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் நாகநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஆகிய முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். மேலும், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பொதுப்பணித் துறை வளாகத்தில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் அலுவலகக் கட்டிடத்தையும் முதல்வர்  திறந்து வைத்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும்,  மக்களின் குடிநீர் தேவைகளைப்  பூர்த்தி செய்யவும், கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்கிடவும் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு, நீர்வள ஆதாரத் துறை மூலமாக  பல்வேறு பாசன மேம்பாட்டுத்  திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூர் கிராமத்தில் 2 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட மாரியம்மன் கோவில் பள்ளம் அணைக்கட்டு; கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம்,  பாரூர் கிராமம், அரசம்பட்டி அருகில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ், 6 கூட்டு குடிநீர்த்திட்ட கிணறுகள் மூலம் 224 கிராம மக்களுக்கு நிரந்தரமாக குடிநீர் வழங்கிடும் வகையில் 8 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பெண்டறஹள்ளி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ், பெண்டறஹள்ளி, காசானூர் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள 34 பாசன கிணறுகளின் நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில் 9 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் நாகநதியின் குறுக்கே, மேல் நகர் ஊராட்சி பகுதியில் உள்ள 97 ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில் 3 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் உள்ள பொதுப்பணித் துறை வளாகத்தில் அமைந்துள்ள அரசு ஆய்வு மாளிகையின் அருகில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் அலுவலகக் கட்டிடம் என மொத்தம் 25 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீர்வள ஆதாரத் துறை மற்றும் பொதுப்பணித் துறைகளின் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் க. சண்முகம், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் க. மணிவாசன், நீர்வள ஆதாரத் துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே. இராமமூர்த்தி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து