முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6,000 பயனர்களின் தகவல்களை சவுதிக்கு தெரிவித்ததாக டுவிட்டர் முன்னாள் ஊழியர்கள் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

கடந்த 2015-ம் ஆண்டு 6,000 டுவிட்டர் பயனர்கள் குறித்து சவுதி அரேபியாவிற்கு உளவு தெரிவித்ததாக டுவிட்டரின் முன்னாள் ஊழியர்கள் 2 பேர் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த அலி அல்சபரா, அகமத் அபவும்மோ ஆகியோர் சவுதி அரச குடும்பத்தில் பணிபுரிந்த அகமத் அல்முத்தேய்ரி என்பவருடன் இணைந்து பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை சவுதி அரேபிய அதிகாரிகளுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இரு டுவிட்டர் ஊழியருக்கும் சவுதி அதிகாரிகளுக்கும் இடையிலான இடைத் தரகராக அல்முத்தேய்ரி செயல்பட்டு வந்துள்ளார். அமெரிக்காவுக்குள் சவுதியை சேர்ந்தவர்கள் மீது உளவு குற்றச்சாட்டு சுமத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி 6,000 பயனர்களின் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் ஆகியவை கசிந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இவர்கள் அனைவரும் சவுதி அரேபிய அரசு குறித்து தொடர் விமர்சனங்களை முன்வைத்தவர்கள் ஆவர். இது தொடர்பாக வாஷிங்டனில் வசித்து வந்த அகமத் அபவும்மோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எப்.பி.ஐ உளவுப் பிரிவுக்கு பொய்யான அறிக்கை மற்றும் ஆவணங்களை வழங்கியதாகவும் அபவும்மோ மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டுவிட்டரில் ஊடக கூட்டு முகாமையாளராக பதவி வகித்த இவர் 2015-ல் அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். மற்ற இருவரும் சவுதி அரேபியாவில் பதுங்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பயனர்களின் தகவல்களை சவுதி அரேபியாவிற்கு வழங்கிய ஊழியர்களுக்கு அந்நாட்டு அரசு பரிசுத்தொகை வழங்கியதாக அமெரிக்கா அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கண்டுபிடித்த எப்.பி.ஐ-க்கு நன்றி தெரிவித்துள்ள டுவிட்டர் நிர்வாகம் வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க தொழில் நுட்பங்கள் மேம்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து