முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கரில் மாற்று நிலம் வழங்க வேண்டும்: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி - 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த ஒருமித்த தீர்ப்பு:

சனிக்கிழமை, 9 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் என்றும், முஸ்லீம்களுக்கு மசூதி கட்டுவதற்காக தகுந்த இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலத்தை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், அயோத்தியில் ராமர் கோவில் கட்டவும் அனுமதி அளித்துள்ளது.

அலகாபாத் கோர்ட் தீர்ப்பு

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் பற்றிய பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சமரச முயற்சி தோல்வி

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்தது. விசாரணை நடந்து கொண்டு இருந்த போதே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணும் யோசனையை முன்வைத்த அரசியல் சாசன அமர்வு, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை அமைத்தது. அந்த குழு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அந்த குழுவின் சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது. இதுபற்றிய தகவல் கடந்த ஆகஸ்டு மாதம் 2-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

40 நாட்களாக விசாரணை

இதைத் தொடர்ந்து, ஆகஸ்டு 6-ம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வு தினசரி விசாரித்து வந்தது. விசாரணையின் போது சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா தரப்பினர் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணை கடந்த மாதம் 16-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். அரசியல் சாசன அமர்வுக்கு தலைமை வகிக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17-ம் தேதி ஓய்வு பெற இருப்பதால், அதற்கு முன்னதாக தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

இந்த நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று முன்தினம் உத்தரபிரதேச மாநில தலைமைச் செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி, டி.ஜி.பி. ஓம்பிரகாஷ் சிங் ஆகியோரை தனது கோர்ட்டு அறைக்கு வரவழைத்தார். அவர்களுடன், உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கேட்டு அறிந்தார். சுமார் ஒரு மணி நேரம் அவர்களுடன் தலைமை நீதிபதி ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து அயோத்தி மேல்முறையீட்டு வழக்கில் அரசியல் சாசன அமர்வு இன்று(நேற்று) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. அயோத்தியில் மாநில போலீசாருடன் துணை ராணுவ படை வீரர்கள் 4 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

இந்நிலையில், அயோத்தி வழக்கில் நேற்று காலை 10.30 மணியளவில்  சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இறுதி தீர்ப்பினை வாசித்தது. அதில், அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்குகிறோம் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார். தொடர்ந்து, சன்னி பிரிவுக்கு எதிரான ஷியா வக்பு போர்டு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, மதச்சார்பின்மையே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை. அதன்படியே சுப்ரீம் கோர்ட் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில், பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை. பாபர் மசூதிக்கு கீழே கண்டறியப்பட்ட கட்டுமானங்கள் இஸ்லாமியர்களின் கட்டுமானங்கள் அல்ல. இந்த விஷயத்தில் தொல்லியல் துறை வழங்கியுள்ள ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை.

நம்பிக்கையை குலைக்க முடியாது

சர்ச்சைக்குரிய இடம் இரு மதத்தினராலும் தங்கள் நம்பிக்கையை வெளிபடுத்தக்கூடிய இடமாக இருந்துள்ளது. அயோத்தி ராமர் பிறந்த இடம் என இந்து மக்கள் நம்புகின்றனர் என்பது மறுக்க இயலாது. இந்துக்களின் நம்பிக்கையை குலைக்க முடியாது. ஆனால், நிலத்தின் உரிமையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் கோர முடியாது. அந்த இடத்தினை பாபர் மசூதி என முஸ்லிம்கள் அழைக்கின்றனர். பாபர் மசூதி இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதனையும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் முடிவெடுத்து விட முடியாது. நிர்மோகி அகாரா வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்படுகிறது. அமைதியை காக்கவும், பாதுகாப்பினை பராமரிக்கவும் ஏற்ற வகையில் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்றுக் கொள்ள வேண்டும். நிலத்தை 3-ஆக பிரித்து கொடுத்தது தவறு. வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசு, உத்தர பிரதேச அரசுகளுக்கு இந்த கோர்ட் உத்தரவு பிறப்பிக்கிறது.

அலகாபாத் கோர்ட் உத்தரவு தவறு

சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து அலகாபாத் நீதிமன்றம் வழங்கியது தவறு. கடந்த 1857-ம் ஆண்டுக்கு முன் சர்ச்சைக்குரிய இடத்தில், உரிமைக்கான ஆவணங்களை நிரூபிக்க முஸ்லீம் அமைப்புகள் தவறி விட்டன. அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம். சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்டுவதற்கு 3 மாதங்களில் மத்திய அரசு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லீம்களுக்கு மசூதி கட்டுவதற்காக தகுந்த இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலத்தை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். கிட்டத்தட்ட 6 நூற்றாண்டுகளாக நீடித்த அயோத்தி பிரச்சினைக்கு சுப்ரீம் கோர்ட் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து