முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசு மீது ஸ்டாலின் மட்டும் குறைகூறுகிறார் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கு

சனிக்கிழமை, 9 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சேலம் : மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அம்மாவின் அரசு மீது ஸ்டாலின் மட்டும் குறைகூறுகிறார் என்று சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

கோதாவரி - காவேரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுகின்ற பொழுது மேட்டூரிலிருந்து கரூர், மாயனூர் கதவணை வரை ஆற்றின் இரு கரைப் பகுதிகளிலும் 50 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீரேற்று மூலமாக அனைத்து ஏரிகளும் நிரப்பப்படும். இதுவே அம்மாவின் அரசின் லட்சியம், இதை நிறைவேற்றியே தீருவோம். இந்த திட்டத்திற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அந்தத் திட்டம் அம்மாவினுடைய கனவுத் திட்டம். அம்மா மறைந்தாலும் அம்மாவின் அரசு அதை தொடர்ந்து செயல்படுத்தும். அந்த வகையில், கரூரிலிருந்து குண்டாறு வரை அந்தத் திட்டத்தை இணைக்கவிருக்கின்றோம். காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை எங்களின் அரசு நிறைவேற்றியே தீரும். அடுத்த ஜூலை மாதத்திற்குள் அதற்கு அடிக்கல் நாட்டப்படும். எங்களுடைய அரசு, அம்மாவின் கனவுத் திட்டமாக காவிரி -குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காக மத்திய அரசுக்கு அறிக்கையை அனுப்பியிருக்கின்றோம். இத்திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. அனுமதி கிடைத்தவுடன் மத்திய, மாநில அரசுகள் இணைந்து காவிரியிலிருந்து குண்டாறு வரையிலான இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவோம். இத்திட்டம் பல்வேறு கட்டங்களாக நிறைவேற்றப்படும். கரூர், மாயனூர் கதவணையிலிருந்து குண்டாறு வரை இணைக்கின்றபொழுது, உபரிநீர் கால்வாய் வழியாக செல்வதால் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் செழிக்கும். வைகை அணை நிரப்பப்பட்டு இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் செழிக்கும். சேலம் மாவட்டம் மட்டுமன்றி தென் மாவட்டங்கள் முழுவதும் செழிக்க எங்களின் அரசு நடவடிக்கை எடுத்து, இத்திட்டத்தினை நிறைவேற்றியே தீரும். எங்கள் திட்டங்களெல்லாம் எதிர்காலத்திலும் விவசாயிகள் பயனடைகின்ற திட்டங்களாக இருக்கின்றது. எதிர்காலத் தமிழகம் ஒளிமயமானதாக இருக்க வேண்டும், வேளாண் பெருமக்களுக்குத் தேவையான நீர், குடிநீருக்குத் தேவையான நீர் முழுவதுமாக வழங்க வேண்டும், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமில்லை என்ற சூழ்நிலையை உருவாக்குவது தான் எங்களுடைய லட்சியம்.

முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டத்தின் வாயிலாக சேலம் மாவட்டத்தில் 56,267 மனுக்கள் பெறப்பட்டதில் 26,712 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 27,010 மனுக்கள் பல்வேறு நிலைகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தள்ளுபடி செய்யப்பட்டுள்ள மனுக்களையும் மறு ஆய்வு செய்து, தகுதியானவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 2545 மனுக்கள் அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது, அதற்கும் தீர்வு காணப்படும்.  சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் மட்டும் 12,989 நபர்களுக்கு  முதியோர் உதவித் தொகை ஒரே நேரத்தில் வழங்குகிற ஒரே அரசு அம்மாவினுடைய அரசு. மக்கள் வைக்கின்ற கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி கொண்டு இருக்கின்ற அரசு அம்மாவின் அரசு. இப்படி எண்ணற்ற திட்டங்களை அம்மாவின் அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கும் பொழுது, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மட்டும் இந்த ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை, இந்த ஆட்சி நடக்கின்றதா? இல்லையா? என்று கேள்வி கேட்கிறார். இவ்வளவு திட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து