பெட்ரோல் விலை 3 மடங்கு உயர்வு - ஈரானில் பொதுமக்கள் போராட்டம்

டெக்ரான் : ஈரானில் பெட்ரோல் விலை 3 மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்து அரசுக்கு எதிராக பொது மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்த போது, கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் ஏற்படுத்தியது. ஆனால் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அதிபர் டிரம்ப் அந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் அணு ஆயுத பயன்பாடு குறித்து அமெரிக்கா- ஈரான் நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.
இந்நிலையில், எண்ணெய் வளம் மிக்க நாடான ஈரானில் பெட்ரோல் விலை 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மானியம் முறைகளிலும் கடுமையான கட்டுப்பாடுகளை ஈரான் அரசு விதித்துள்ளது. ஒரு காருக்கு மாதம் 60 லிட்டர் மட்டுமே வழங்கப்படும். அந்த அளவுக்கு மேல் வாங்க வேண்டுமானால் அதற்கு இருமடங்கு விலை தர வேண்டும். மேலும் இணையதள சேவைகளிலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தலைநகர் டெக்ரான் உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களை கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டனர். பொதுமக்கள் கலைந்து செல்லாததால் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கலையச் செய்தனர். பொருளாதார ரீதியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டாலும், ஈரானிய அரசாங்கத்திற்கும், அதன் பிராந்தியக் கொள்கைகளுக்கும் எதிராக சில கோஷங்கள் எழுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.