முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முரசொலி பஞ்சமி நில விவகாரம்: 19-ம் தேதி நேரில் ஆஜராக உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனுப்பியது

சனிக்கிழமை, 16 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : முரசொலி பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் 19-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

தனுஷ் நடித்த அசுரன் படத்தைப் பார்த்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பஞ்சமி நிலப் போராட்டம் குறித்து பாராட்டி பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தி.மு.க. பஞ்சமி நிலம் குறித்து பேசுகிறது. ஆனால் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது என பதிவிட்டிருந்தார். பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இல்லை என்பதை நான் நிரூபித்தால் ராமதாஸும், அன்புமணியும் அரசியலை விட்டே விலகத்தயாரா? அப்படி இருந்தால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன் என ஸ்டாலின் சவால் விட்டார். அதன்படி முரசொலி அலுவலக மூலப்பத்திரத்தை வெளியிட்டார். ஆனால் அதுமட்டும் போதாது, வேறு சில ஆவணங்களும் வேண்டும் என ராமதாஸ் பதிலளித்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் எதிரொலித்தது. தி.மு.க.வை பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தன. பதிலுக்கு தி.மு.க.வும் விமர்சித்தது.

இந்நிலையில் பா.ஜ.க. மாநில செயலாளர் சீனிவாசன் முரசொலி நிலம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையருக்கு புகார் அளித்தார். டெல்லிக்கும் நேரில் சென்று புகார் அளித்தார். இதையடுத்து தேசிய பட்டியலின ஆணையம் தலைமைச் செயலருக்கு ஒரு கடிதம் எழுதியது. அதில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் சென்னை வருகிறார், அவருடன் பா.ஜ.க. மாநிலச் செயலாளர் சீனிவாசன் வருவார். நிலம் குறித்து அவர்கள் கேட்கும் ஆவணங்களை அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பஞ்சமி நில விவகாரத்தில் புதிய திருப்பமாக முரசொலி நிர்வாக இயக்குனராக பதவி வகிக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஒரு சம்மனை அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் பஞ்சமி நில விவகாரம் சம்பந்தமாக வரும் 19-ம் தேதி மதியம் 3-00 மணிக்கு சென்னை சாஸ்திரி பவனில் அமைந்துள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அலுவலகத்தில் ஆணைய துணைத்தலைவர் முருகன் முன்பு ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்மன் நகல் தலைமைச் செயலர் மற்றும் பா.ஜ.க. மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பெரியசாமிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து