திருமங்கலம் நகரில் புதிய பேருந்து நிலையம்,ரயில்வே மேம்பாலத்திற்கு விரைவில் பூமி பூஜை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்:

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019      மதுரை
17 tmm   rpu news

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் பொதுமக்களின் வசதிக்கென புதிய பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே மேம்பாலத்திற்கு விரைவில் பூமி பூஜை போடப்படும் என தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் 1801பேருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5.20கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு ராஜாஜி திடல் பகுதியில் சிறப்புடன் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பயனாளிகள் 1801 பேருக்கு ரூ.5.20கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: தற்போது திருமங்கலம் நகராட்சியில் ரூ.10கோடி செலவில் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்ள அனுமதி பெற்றுள்ளோம்.மக்களாகிய உங்களின் ஆதரவும் அன்பும் எங்களுக்கு இருந்தால் எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் வளர்ச்சித் திட்டங்களுக்கு பெற்றுத்தர நாங்கள் தயாராக இருக்கிறோம்.மிக விரைவில் அம்மாவின் அருளாசியுடன் புதிய பேருந்து நிலையத்திற்கு பூமி பூஜை போட இருக்கிறோம்.அதே போல் ரயில்வே மேம்பாலத்திற்கு பூமி பூஜை போடும் காலம் கனிந்து இருக்கிறது.அதே போல் ஆறுகண் பாலம்,பஸ்போர்ட் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையும் விரைவில் அமையவிருக்கிறது.இதன் மூலம் திருமங்கலம் தொகுதி தன்னிறைவு பெற்ற தொகுதியாகிடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக திருமங்கலம் நகருக்கு கழக அரசின் சரித்திர சாதனைகளை மக்களுக்கு விளக்கிச் சொல்லிடும் மாபெரும் தொடர் ஜோதி பயணத்தினை தலைமையேற்று வழிநடத்தி வருகைபுரிந்த தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர்,கழக அம்மா பேரவை செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமாருக்கு திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன் தலைமையில் ஏராளமானோர் திரண்டு வந்து மலர்களை தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ்,திருமங்கலம் வட்டாட்சியர் தனலட்சுமி,மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன்,முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன்,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன்,ராமசாமி,மகாலிங்கம்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,நகர அவைத் தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர் மன்ற தலைவர் சதீஷ்சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து