எனது ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை; இலங்கை அதிபராக பதவி ஏற்ற கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2019      உலகம்
Gotabhaya Rajapaksa 2019 11 17

கொழும்பு : எனது ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை என இலங்கை அதிபராக பதவி ஏற்ற கோத்தபய ராஜபக்சே அறிவித்து உள்ளார்.

இலங்கை அதிபராக இருக்கும் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைந்ததால் அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம், தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததால், பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது. இருப்பினும், அதையும் மீறி துப்பாக்கி சூடு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடந்தன.

மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில், ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா, இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளரும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு இடையேதான் நேரடி போட்டி நிலவியது.

 பின்னர்   ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. ஓட்டுப்பெட்டிகள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில், தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சஜித் பிரேமதாசா அதிக ஓட்டுகள் பெற்றார். முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் முத்தூர் பகுதியிலும் அவருக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தன.

ஆனால், சிங்களர்கள் அதிகமாக வசிக்கும் மாகாணங்களில் கோத்தபய ராஜபக்சேவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தன. இதனால், கோத்தபய ராஜபக்சே தொடர்ந்து முன்னிலையிலேயே இருந்தார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில், அவர் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். கோத்தபய ராஜபக்சே 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 ஓட்டுகளும் (52.25 சதவீதம்), சஜித் பிரேமதாசா 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 ஓட்டுகளும் (41.99 சதவீதம்) பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதர வேட்பாளர்கள் 5.76 சதவீத ஓட்டுகள் பெற்றனர்.

அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். மேலும், ஐக்கிய தேசிய கட்சியின் துணைத்தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்றார். அவருக்கு அந்த நாட்டின் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இதன்பின்னர் கோத்தபய ராஜபக்சே கூறிய போது, தமிழ் மக்களும் தமக்கு வாக்கு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவர்கள் வாக்களிக்கவில்லை. எனினும் அனைவரையும் சமமாக பார்க்கிறேன்.எமது நாட்டு இறையாண்மைக்கு சர்வதேசம் மதிப்பளிக்க வேண்டும். எனது ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை என்று இலங்கை அதிபராக பதவி ஏற்று கொண்ட கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து