தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ல் அறிவிக்கப்படும் - சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2019      தமிழகம்
tamilnadu-state-election-commission 2019 02 27

சென்னை : உள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ந்தேதி அறிவிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை.

உள்ளாட்சி அமைப்பு தொகுதிகள் வரையறுக்கப்பட்டதில் குளறுபடிகள் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து குளறுபடிகள் அனைத்தும் நீக்கப்பட்டன. அதன் பிறகும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தாமதம் ஏற்படுவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இது தொடர்பாக தமிழக மாநில தேர்தல் ஆணையத்தை விசாரித்து தேர்தல் தேதியை அறிவிக்க உத்தரவிட்டனர். அப்போது அக்டோபர் 30-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிப்போம் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்தது.

ஆனால் மாநில தேர்தல் ஆணையத்தால் திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.

அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் வேண்டும் என்றே காலதாமதம் செய்வதாகவும், எனவே கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வக்கீல் ஜெயசுசிங் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்தை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று  உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது மாநில தேர்தல் ஆணைய வக்கீல் பி.எஸ்.நரசிம்மன், “உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு சில பணிகள் செய்ய வேண்டியது உள்ளது. எனவே மேலும் ஒரு மாத கால அவகாசம் தேவைப்படுகிறது” என்றார்.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்கவில்லை. ஏற்கனவே நீங்கள் ஒரு மாத கால அவகாசம் வாங்கி விட்டீர்கள் என்றனர்.

அதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணைய வக்கீல், “தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு உள்ளன. திட்டமிட்டபடி தேர்தல் தேதி அட்டவணை அறிவிப்பு ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார். மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த தகவலை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் டிசம்பர் 13-ந்தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

இதையடுத்து டிசம்பர் 2-ந்தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனவே உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் இறுதியில் நடைபெறுவது உறுதியாகி இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் எப்படி நடைபெறும்? எத்தனை கட்டங்களாக நடைபெறும்? என்பன போன்ற விவரங்கள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாகும்போது தெரிந்து விடும்.

தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12,618 கிராம பஞ்சாயத்துக்கள், 32 மாவட்ட ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு கட்சி ரீதியில் தேர்தல் நடைபெறும்.

கிராம பஞ்சாயத்துக்கள் பெரும்பாலும் கட்சி சார்பின்றி நடைபெறும். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவது உறுதியாகி விட்டதால் கட்சிகள் தீவிரமாகி உள்ளன.அனைத்துக் கட்சிகளும் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன. அதன் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து