திருமங்கலம் பகுதியில் புதர்மண்டி கிடக்கும் நான்குவழிச்சாலை! இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி!!
திருமங்கலம்.- பராமரிப்பு பணிகள் ஏதும் முறையாக செய்யப்படாததால் மதுரைமாவட்டம் திருமங்கலம் பகுதியிலுள்ள நான்குவழிச்சாலை புதர்கள் மண்டி நரகவழிச்சாலையாக மாறிவருகிறது. இதன் காரணமாக விபத்துகள் அதிகம் ஏற்பட்டு இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
சாலையோரங்களில் பரவிக் கிடக்கும் மணல் திட்டுக்கள்,காணாமல்போன எச்சரிக்கை பலகைகள்,செயல்படாமல் போன சிக்னல்கள்,போதிய விளக்குகளின்றி இருளில் மூழ்கிகிடக்கும் சாலைகள் என திருமங்கலம் பகுதியி நான்குவழிச்சாலை தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது.இதனிடையே இந்த பகுதி வழியாக சென்றிடும் வாகனங்கள் அனைத்திற்கும் கப்பலூரில் உள்ள டோல்கேட்டில் வடமாநில பணியாளர்களை கொண்டு சுங்க கட்டணம் கறாராக வசூலிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாள்தோறும் சென்றிடும் ஆயிரக்கணக்கான வாகனங்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை மனதில் கொண்டாவது பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறதா என்றால் அதுதான் கிடையாது.இதனால் திருமங்கலம் பகுதி நான்கு வழிச்சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் திருமங்கலம் பகுதி நான்கு வழிச்சாலை முறையாக பராமரிக்கப்படாததால் சாலையில் இருபறங்களிலும் ஆளயரத்திற்கு புதர்களும் முட்செடிகளும் வளர்ந்துள்ளது. இந்த புதர்களும் முட்டிசடிகளும் இருசக்கர வாகனங்கள் சென்றிடும் சாலையோர பகுதியை மூடியிருப்பதால் அவையனைத்தும் நான்கு சக்கர வாகனங்கள் சென்றிடும் சாலைப்பகுதியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனிடையே சாலையோரத்தில் வளர்ந்துள்ள முட்புதர்கள் இருசக்கர வாகனத்தில் செல்வோரது உடலை கிழித்து காயம் ஏற்படுத்தி விடுகிறது.மேலும் புதர்களுக்கு அஞ்சி சாலையின் நடுவே செல்வோர் கனரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.எனவே நரகவழிச்சாலையாக மாறிவரும் திருமங்கலம் பகுதி நான்குவழிச்சாலையில் முறையான பராமரிப்புபணிகளை மேற்கொண்டு இருசக்கர வாகன ஓட்டிகளை அவதிக்கு ஆளாக்கிடும் சாலையோர முட்புதர்களை கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் உடனடியாக அகற்றிட வேண்டும் என்பதே திருமங்கலம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.