முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரி உயர்வு நிறுத்தி வைப்பு - பழைய வரியையே செலுத்தலாம் என தமிழக அரசு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய வரியையே செலுத்தலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

சென்னை மாநகராட்சியில் 1998-க்கு பின்னரும், பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 2008-க்குப் பின்னரும் சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்படவில்லை. சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் 1.4.2018 முதல் சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசால் 19.7.2018ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், வாடகை அல்லாத சொந்த குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதத்திற்கு மிகாமலும், வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதத்திற்கு மிகாமலும், பிற வகை கட்டடங்களுக்கு 100 சதவீதத்திற்கு மிகாமலும் சொத்து வரியை உயர்த்த ஆணைகள் வெளியிடப்பட்டன.

பின்னர் அரசு, 26.7.2018-ல் வாடகை மற்றும் வாடகை அல்லாத குடியிருப்பு கட்டிடங்கள் அனைத்திற்குமே சொத்து வரி 50 சதவீதத்திற்கு மிகாமல் உயர்வு செய்யப்படும் என அறிவித்தது. இதன் அடிப்படையில் 1.4.2018 முதல் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் சொத்து வரி சீராய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. விரிவாக்கம் செய்யப்பட்ட 6 மாநகராட்சிகள் மற்றும் 4 நகராட்சிப் பகுதிகளில், ஏற்கனவே இணைக்கப்பட்ட பகுதிகளில் முந்தைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் உள்ளது போன்றே திருத்தப்பட்ட மண்டல அடிப்படை மதிப்பீட்டின்படி சொத்து வரி உயர்வு செய்து சொத்து வரி விதிக்கப்பட்டது. சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகள் தவிர அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், 1.4.2018-க்கு முன்பு குறைவான அளவீடு செய்யப்பட்ட கட்டிடங்கள் மற்றும் சொத்து வரி குறைவாக விதிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மறு அளவீடு செய்யப்பட்டு, சொத்து வரி மறுநிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் பல்வேறு தரப்பினரிடமிருந்து சொத்து வரி உயர்வினை குறைக்கக் கோரி கோரிக்கைகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் பெறப்பட்டு வந்தன. அதன் அடிப்படையில், நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் கடந்த 8.7.2019அன்று உயர்த்தப்பட்ட சொத்து வரி சீராய்வு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என அறிவித்தேன்.

அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், நான் சட்டமன்றத்தில் ஏற்கனவே அறிவிப்பு செய்தபடி உயர்த்தப்பட்ட சொத்து வரி மறுபரிசீலனை செய்ய ஏதுவாக, அரசு நிதித்துறை (செலவினங்கள்) முதன்மை செயலாளர் தலைமையில், நகராட்சி நிர்வாக ஆணையர், பேரூராட்சிகளின் இயக்குநர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அடங்கிய 3 உறுப்பினர்கள் கொண்ட குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மறு கணக்கீடு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் திருத்தப்பட்ட மண்டல அடிப்படி மதிப்பீட்டின்படி உயர்வு செய்யப்பட்ட சொத்துவரி, மிக அதிகமாக உள்ளதென பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள், வணிகர் சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் மீது அரசுக்கு அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவரையில், 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில், சொத்து வரி சீராய்வுக்கு முன்னர், 1.4.2018 அன்று செலுத்தி வந்த அதே சொத்து வரியை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கட்டிட உரிமையாளர்கள் செலுத்தினால் போதும் எனவும், வரி விதிப்பாளர்கள் ஏற்கனவே கூடுதலாக செலுத்திய சொத்து வரி அவர்களின் சொத்து வரி கணக்கில் அடுத்த அரையாண்டுகளில் ஈடு செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது உள்ளாட்சித்தேர்தல் காரணமாக சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்படுகிறதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சொத்துவரி உயர்வு நிறுத்தப்பட்டதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தமிழக சட்டமன்றத்திலும் பல தரப்பிலும் மக்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டார். அதன் காரணமாக சொத்துவரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் உயர் அதிகாரிகளின் குழுவுக்கு காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் வேகமாக மறு ஆய்வு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். 

இச்சந்திப்பின் போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், பேரூராட்சிகளின் இயக்குநர்  எஸ். பழனிசாமி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன் உள்ளிட்ட அரசுஅலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து