பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை லாபகரமானதாக மாற்றுவோம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதி
புது டெல்லி : அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை லாபகரமான நிறுவனமாக மாற்றுவோம் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இழப்பையே சந்தித்து வருகிறது. அதே போல், மற்றொரு பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான எம்.டி.என்.எல். நிறுவனமும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நஷ்டத்தையே சந்தித்து வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் கடந்த 10 ஆண்டுகளில் 40 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளன. இந்த சூழலில், மக்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இரண்டு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் புத்துயிரூட்டி லாபகரமான நிறுவனமாக மாற்ற உள்ளோம் என்று தெரிவித்தார்.
கடந்த மாதம், பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, நிறுவனத்திற்கு 69 ஆயிரம் கோடி ரூபாய் நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. கடன் சுமையில் சிக்கி தவிக்கும் இந்த இரண்டு நிறுவனங்களும், சந்தையில், பிற நிறுவனங்களுடன் போட்டியிட ஏதுவாக, 4 ஜி சேவை துவங்க அலைக்கற்றை ஒதுக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.