முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய தென்காசி மாவட்டம் தமிழகத்தின் தலைசிறந்த மாவட்டமாக உறுதியாக திகழும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

புதிய தென்காசி மாவட்டம் தமிழகத்தின் தலைசிறந்த மாவட்டமாக உறுதியாக திகழும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

புதிய தென்காசி மாவட்டம் தொடக்க விழா, தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் நேற்று நடைபெற்றது, இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து புதிதாக நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், தென் ஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து புதிதாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள்,  திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து புதிதாக கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள், தர்மபுரி மாவட்டத்திலிருந்து புதிதாக கிருஷ்ணகிரி மாவட்டம் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது ஆட்சிக் காலங்களில் மொத்தம் 7 புதிய மாவட்டங்களை உருவாக்கினார். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில், ஈரோடு, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய 5 புதிய மாவட்டங்களை உருவாக்கியதை இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்ந்திட கடமைப்பட்டுள்ளேன். எம்.ஜி.ஆர்,  ஜெயலலிதா ஆகியோர் வகுத்துத் தந்த பாதையில் நடை பயின்று, அவரது அடியொற்றி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென்காசி மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம் என ஐந்து புதிய மாவட்டங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். அறிவிப்பை அறிவிப்பாகவே விட்டு விடாமல் செயலாக்கிக் காட்டுகின்ற ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த 5 புதிய மாவட்டங்களில் முதல் மாவட்டமாக தென்காசி மாவட்டத்தின் தொடக்க விழா நடைபெறுகிறது. நில வளமும், நீர் வளமும் மலை வளமும், வன வளமும் பின்னிப் பிணைந்து நோக்குமிடம் எல்லாம், இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் சுற்றுச் சூழலில் அமைந்திருக்கும் தென்காசி மாவட்டம்,மேற்குத் தொடர்ச்சி மலை என்னும் இயற்கைத் தாயின் செல்லப் பிள்ளையாக விளங்குகிறது.

தென்காசி என்ற சொல்லக் கேட்டதும் அருள் மழை பொழியும் காசி விஸ்வநாதர் ஆலயமும்,பல்வேறு மூலிகைகள் கலந்து ஓடி வரும் தண்ணீரை ஏந்தி வரும் குற்றால அருவிகளும் நம் கண் முன்னே விரியும். ஒரு மாவட்டத்திற்குத் தேவையான அனைத்து சிறப்புகளையும் கொண்டதாக,தென்காசி மாவட்டம் விளங்குகிறது. கல்லூரிகள், பள்ளிகள், வங்கிகள், திருக்கோயில்கள், திருமடங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், சுற்றுலாத் தலங்கள், திருமலைப்புரம் ஓவியங்கள் மற்றும் தென்காசிப் பாண்டியர்கள் காலத்து இலக்கியங்கள் முதலான கலைச் செல்வங்கள் ஆகியவை மிகுந்து இன்றைக்கும் சிறப்பு மிக்க தலமாக தென்காசி விளங்குகிறது. இப்பகுதியின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வந்துள்ளது. தென்காசியை தலைநகராகக் கொண்டு, தென்காசியின் பெயராலே அமைந்திருக்கும் இப் புதிய மாவட்டம், மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அவர்களது சிரமத்தை வெகுவாகக் குறைத்து, சிறந்த வளர்ச்சி பெற்று தமிழத்தின் தலை சிறந்த மாவட்டமாகத் திகழும் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து