மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு அமையும்: சரத் பவார் அறிவிப்பு

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு பதவியேற்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், சிவசேனா, பா.ஜ.க. இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பா.ஜ.க.வுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்காக குறைந்த செயல் திட்டத்தைத் தீட்டி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்ட நிலையில் நேற்று மும்பையில் கூடி ஆலோசனை நடத்தின. இந்தக் கூட்டத்துக்கு பிறகு சரத் பவார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினோம். மூன்று கட்சிகளும் இணைந்து புதிய அரசை அமைப்பது என்றும், அரசுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமை ஏற்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்கள் தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.