இந்தியா-வங்காளதேசம் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தாவில் தொடங்கியது

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2019      விளையாட்டு
Sports-1 2019 11 22

Source: provided

கொல்கத்தா : வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. இது பகல் - இரவாக நடத்தப்படும் போட்டி என்பது கூடுதல் விசேஷமாகும். இதனால் இந்த டெஸ்ட் இப்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

டெஸ்ட் அரங்கில் ‘நம்பர் ஒன்’ அணியாக வலம் வரும் இந்தியா முதல்முறையாக பகல் - இரவு டெஸ்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆரம்பத்தில் பகல் - இரவு டெஸ்டில் விளையாட தயக்கம் காட்டிய இந்திய அணி, சவுரவ் கங்குலி கிரிக்கெட் வாரிய தலைவர் ஆனதும், சம்மதம் தெரிவித்து விட்டது. பகல் - இரவு டெஸ்டுக்கு மினுமினுப்பான இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க் பால்) பயன்படுத்தப்படுகிறது. இது தான் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கக் கூடியதாகும். பிங்க் பந்து அதிகமாக ‘ஸ்விங்’ ஆகும் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்களின் ஜாலம் கொடிகட்டி பறக்கும். மாலைவேளையில் பந்து கண்ணுக்கு தெளிவாக தெரிவதில் சிக்கல் உள்ளது.

அதாவது சூரிய வெளிச்சம் மறைந்து, மின்னொளி எரியவிடப்படும் சமயத்தில் அதற்கு ஏற்ப பேட்ஸ்மேன்கள் தங்களை துரிதமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் தான் முந்தைய பகல் - இரவு டெஸ்டுகளில் அதிகமான விக்கெட்டுகள் சரிந்துள்ளன. இந்த தடைகளை பேட்ஸ்மேன்கள் எப்படி உடைக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்திய அணியில் புஜாரா, ஜடேஜா, மயங்க் அகர்வால் உள்ளிட்டோர் 2016-ம் ஆண்டு துலீப் கோப்பைக்கான முதல்தர கிரிக்கெட்டில் பிங்க் பந்தில் விளையாடி உள்ளனர். அந்த அனுபவங்களை சக வீரர்களிடம் பகிர்ந்துள்ளது உதவிகரமாக இருக்கும். சாதனையின் விளிம்பில் உள்ள விராட் கோலி 32 ரன்கள் எடுத்தால், கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை பெறுவார்.

சாதகமான சூழலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் சாதிக்கும் முனைப்புடன் வரிந்து கட்டுகிறார்கள். இந்த தொடரையும் இந்திய அணி வசப்படுத்தினால், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வென்ற 12-வது தொடராக இது பதிவாகும். வங்காளதேச அணியும் இதற்கு முன்பு பகல் - இரவு டெஸ்டில் ஆடியது கிடையாது. முதலாவது டெஸ்டில் 3 நாட்களுக்குள் அடங்கிப்போன அந்த அணி இந்த டெஸ்டிலும் நிலைகொண்டு ஆடுவது சந்தேகம் தான். இருப்பினும் இந்தியாவுக்கும் இது தான் முதல் ‘பிங்க்’ டெஸ்ட் என்பதால் தங்களால் சமாளிக்க முடியும் என்று வங்காளதேச வீரர்கள் நம்புகிறார்கள்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டியை பார்க்க நிறைய பிரபலங்கள் கொல்கத்தாவில் குவிந்துள்ளனர். போட்டியை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ், ராகுல் டிராவிட், கும்பிளே உள்ளிட்டோர் நேரில் பார்க்க உள்ளனர். செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், பேட்மிண்டன் மங்கை பி.வி.சிந்து, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் போட்டியின் போது கவுரவிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. இது 67 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட ஸ்டேடியம் என்பது நினைவு கூரத்தக்கது.

ஈடன்கார்டனில் 1934-ம் ஆண்டில் இருந்து இதுவரை 41 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 12-ல் வெற்றியும், 9-ல் தோல்வியும், 20-ல் டிராவும் கண்டுள்ளது. மொத்தம் 76 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முகமது அசாருதீன், வி.வி.எஸ்.லட்சுமண் தலா 5 சதங்கள் அடித்துள்ளனர். 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 7 விக்கெட்டுக்கு 657 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். 1983-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி 90 ரன்னில் சுருண்டது குறைந்தபட்சமாகும்.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து