பகல்-இரவு டெஸ்ட் அடிக்கடி நடத்தக்கூடாது:: பிங்க் பந்தில் பீல்டிங் செய்வது கடினம்-இந்திய கேப்டன் கோலி

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2019      விளையாட்டு
kohli 2019 10 22

Source: provided

பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியதையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சில தினங்களாக பிங்க் நிற பந்தில் பீல்டிங் பயிற்சி மேற்கொண்டதில் இருந்து எனக்கே சில விஷயங்கள் ஆச்சரியமாக தெரிந்தன. ‘ஸ்லிப்’ பகுதியில் நின்றபடி பிங்க் பந்தை பிடிக்கும் போது அது கைகளை கடினமாக தாக்குகிறது. அதை கிட்டத்தட்ட கனமான ஆக்கி பந்து போன்று உணர்ந்தோம். பளபளப்புக்காக பந்து மீது பூசப்பட்டிருக்கும் அரக்கு காரணமாக நிச்சயமாக கடினமாகத்தான் இருக்கிறது. சிவப்பு நிற பந்தை காட்டிலும் இந்த வகை பந்தை எல்லைக்கோட்டில் இருந்து விக்கெட் கீப்பர் நோக்கி வீசுவதற்கு கூடுதல் சக்தி தேவைப்படுகிறது.

பகல்வேளையில் உயரமான கேட்ச்சுகளை பிடிப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். சிவப்பு அல்லது வெள்ளை நிற பந்துகள் உயரத்தில் இருந்து கீழ்நோக்கி வரும் போது, அதன் வேகத்தை கண்டுபிடித்து விட முடியும். ஆனால் பிங்க் பந்து எவ்வளவு வேகத்தில் நம் கையை வந்தடையும் என்பது தெரியவில்லை. பயிற்சியின் போது பீல்டிங் பகுதி எனக்கு மிகவும் சவாலாக அமைந்தது. பிங்க் பந்து எவ்வளவு சவால் மிக்கது என்பதை பார்த்து மக்களும் ஆச்சரியப்படப்போகிறார்கள்.

இதே போல் சூரியன் மறையும் சமயத்தில் பந்தை தெளிவாக பார்க்க முடியவில்லை. பந்து தூரத்தில் வருவது போல் தான் தெரிகிறது. ஆனால் துரிதமாக வந்து பதம் பார்த்து விடுகிறது. கூடுதல் பளபளப்பு அதனை வேகமாக பயணிக்க வைக்கிறது. மொத்தத்தில் நாங்கள் மிகவும் துல்லியமாக கணித்து செயல்பட வேண்டி உள்ளது. எங்களது திறமையை சோதிக்கும் களமாக இந்த டெஸ்ட் இருக்கும். இந்த டெஸ்டின் போது பனிப்பொழிவின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் எந்த நேரத்தில் பனிபெய்ய ஆரம்பிக்கும் என்பது தெரியவில்லை. மற்ற நாடுகளில் நடக்கும் பகல் -இரவு டெஸ்டுக்கும் இந்தியாவில் நடக்கும் பகல் - இரவு டெஸ்டுக்கும் இது தான் வித்தியாசமாகும்.

டெஸ்ட் கிரிக்கெட் என்பது பகல் - இரவில் மட்டும் நடக்கும் போட்டியாக மாறிவிடக்கூடாது என்பதே எனது கருத்து. ஏனெனில் காலையில் களம் இறங்கும் போது உருவாகும் அந்த பதற்றத்தை நீங்கள் இழந்து விடுவீர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் சுவாரஸ்யத்தை கொண்டு வரலாம். அது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அடிப்படையில் இருந்து விடக்கூடாது. ஒவ்வொரு பகுதியிலும் (செசன்) பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடிக்க போராடுவதும், அவர்களை சீக்கிரம் வெளியேற்ற பந்து வீச்சாளர்கள் முயற்சிப்பதும், இவை தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் பொழுது போக்காக இருக்க வேண்டும். ஒருவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க பிடிக்கவில்லை என்றால், அதை விரும்பும்படி அவரை கட்டாயப்படுத்தக்கூடாது டெஸ்ட் கிரிக்கெட்டை பார்த்து உற்சாகமும், பரவசமும் அடையக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் டெஸ்ட் போட்டியை பார்க்க வர வேண்டும் என்பதே எனது கருத்து. ஏனெனில் அவர்கள் தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் தன்மையை புரிந்து கொள்வார்கள்.

இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் சொன்னது போல், இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்று நிரந்தரமான போட்டி அட்டவணை இருக்க வேண்டும். அப்போது தான் டெஸ்ட் போட்டியை பார்க்க ரசிகர்கள் திட்டமிட்டு முன்கூட்டியே தயாராவார்கள். இதே போல் பகல் - இரவு டெஸ்ட் எப்போதாவது இருக்கலாம். அதுவே வழக்கமான நடைமுறையாகி விடக்கூடாது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் போது பகல் -இரவு டெஸ்டில் விளையாட தயாராக இருப்பீர்களா? என்று கேட்கிறீர்கள். எப்போதெல்லாம் பகல் - இரவு டெஸ்டுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறதோ, அதற்கு முன்பாக முறையான பயிற்சி ஆட்டம் இருக்க வேண்டும். அப்போது தான் விளையாட முடியும். இவ்வாறு கோலி கூறினார்.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து