திருப்பதி பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திக பிரம்மோற்சவ விழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது : பக்தர்கள் திரண்டு தரிசனம்

திருப்பதி : திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நேற்று வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சானூர் அலமேலு மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவம் வேத மந்திரங்களை ஓத, பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க, இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். டிசம்பர் மாதம் 1-ம் தேதி தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைய உள்ளது. முதல்நாளான நேற்று இரவில் சின்ன சேஷ வாகன சேவை நடைபெற்றது. பிரம்மோற்சவத்தையொட்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திருச்சானூரிலிருந்து திருப்பதி வரை அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.