முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து காயம் காரணமாக தவான் விலகல் - சஞ்சு சாம்சன் சேர்ப்பு

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் டிசம்பர் 6-ம் தேதியும், 2-வது போட்டி திருவனந்தபுரத்தில் 8-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி மும்பையில் 11-ம் தேதியும் நடக்கிறது.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், சூரத்தில் நடந்து வரும் சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மராட்டிய அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது இடது முழங்காலில் காயம் அடைந்தார். ஷிகர் தவானின் காயத்தை ஆய்வு செய்த இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவ குழு காயம் முழுமையாக குணமடைய அதிக நாட்கள் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

இதனால் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகி இருக்கிறார். ஷிகர் தவானுக்கு பதிலாக கேரள மாநிலத்தை சேர்ந்த சஞ்சு சாம்சனை இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு கமிட்டியினர் தேர்வு செய்துள்ளனர். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கு முன்பு ஷிகர் தவான் உடல் தகுதியை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் தொடரில் முதலாவது ஆட்டம் சென்னையில் டிசம்பர் 15-ம் தேதி நடக்கிறது.

ஷிகர் தவான் சமீபத்தில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியிலும் சையத் முஸ்தாக் அலி கோப்பை போட்டியிலும் சோபிக்கவில்லை. அதே சமயம் வங்காளதேசத்துக்கு எதிரான போட்டி தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தாலும் ஆடும் லெவன் அணியில் இடம் அளிக்கப்படாமல் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரில் இருந்து சஞ்சு சாம்சனை நீக்கியது விமர்சனத்துக்கு உள்ளான நிலையில் அவருக்கு மீண்டும் இடம் கிடைத்து இருக்கிறது.

இதற்கிடையில் கொல்கத்தாவில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் (பகல் - இரவு) கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட்கீப்பர் விருத்திமான் சஹாவுக்கு வலது கை மோதிர விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்ததாகவும், அவர் விரைவில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்து காயத்தில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு திரும்ப தேவையான பயிற்சிகளை மேற்கொள்வார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி அடுத்ததாக டெஸ்ட் போட்டியில் அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதத்தில் தான் விளையாடுகிறது. நியூசிலாந்தில் நடைபெறும் இந்த போட்டி தொடருக்கு முன்பாக விருத்திமான் சஹா உடல் தகுதி பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயம் குறித்து விருத்திமான் சஹா அளித்த பேட்டியில், ‘சாதாரணமான எலும்பு முறிவு தான். காயம் குணமடைய 5 வாரத்துக்கு மேல் ஆகாது. வீடு சென்று சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு பயிற்சிக்காக செல்வேன்’ என்று தெரிவித்தார்.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணி வருமாறு:-

விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், சஞ்சு சாம்சன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து