முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டன் பாலத்தில் 2 பேரை கத்தியால் குத்தி கொன்றவர், பாக். பயங்கரவாதி

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : லண்டன் பாலத்தில் 2 பேரை கத்தியால் குத்தி கொன்றவர், பாகிஸ்தான் பயங்கரவாதி. அவர் போலீஸ் அதிகாரிகளுடனான மோதலின்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.  

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தேம்ஸ் நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலம், லண்டன் பாலம் என அழைக்கப்படுகிறது.  கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 1.58 மணிக்கு இந்த பாலத்துக்கு அருகே பொதுமக்கள் மீது சிலர் கத்தியால் சரமாரியாக குத்தி காயப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. 

அதாவது, லண்டன் பாலத்தின் வடக்கு முனையில் உள்ள பிஷ்மாங்கர் அரங்கில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சார்பில் கைதிகள் மறுவாழ்வு தொடர்பான மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இதில் ஏராளமான மாணவர்களும், முன்னாள் கைதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த மாநாட்டு அரங்குக்குள் ஒரு மர்ம நபர் கத்தியால் குத்தி விட்டு, வெளியே ஓடிவந்து பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீதும் குத்தினார். அதைக் கண்ட பொதுமக்கள் பதற்றத்தில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கத்திக்குத்து நடத்திக்கொண்டிருந்த நபரை சுட்டுக்கொன்றனர்.  அவரது தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களை அங்கிருந்து மீட்பு படையினர் மீட்டு ஆம்புலன்சுகளில் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.  அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் ஆண், மற்றவர் பெண் ஆவார். 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் ஆண், 2 பேர் பெண்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதி லண்டன் மாநகர போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. லண்டன் பால பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்பு, ரோந்து பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

அந்த பகுதியை தவிர்க்குமாறு பொதுமக்களை மாநகர போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். விசாரணைக்கு உதவும் தகவல்களை வழங்குமாறும் பொதுமக்களுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கிடையே லண்டன் பால தாக்குதலை நடத்தியவர் உஸ்மான்கான் (வயது 28) என்றும், அவர் போலீஸ் அதிகாரிகளுடனான மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார் என்றும் லண்டன் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் நீல் பாசு உறுதிசெய்தார்.

உஸ்மான்கானின் பூர்வீகம் பாகிஸ்தான். ஆனால் அவர் பிறந்தது, லண்டன். ஸ்டாபோர்டுஷயர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இவர் 2012-ம் ஆண்டு, பயங்கரவாத குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர், சிறையில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று நீல் பாசு குறிப்பிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து