குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்ததை அடுத்து பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மயிலாடியில் அதிகபட்சமாக 54.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இந்த மாத தொடக்கத்தில் கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு மழை சற்று ஓய்ந்திருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது. நேற்றும் மழை நீடித்தது.
மயிலாடி, கொட்டாரம், ஆனைக்கிடங்கு, குறுந்தன் கோடு, அடையாமடை, கோழிப்போர்விளை, முள்ளங்கினாவிளை, புத்தன் அணை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்யத் தொடங்கிய மழை நேற்று காலை வரை நீடித்தது.
விடிய, விடிய மழை பெய்ததை அடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மயிலாடியில் அதிகபட்சமாக 54.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
நாகர்கோவிலில் நேற்று காலையிலும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் கோட்டார், மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, மீனாட்சிபுரம் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நேற்று முன்தினம் ஒருசில பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் குடை பிடித்தவாறு வந்தனர். மலையோர பகுதியான பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இதனால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர் வரத்து கணிசமாக அதிகரித்து உள்ளது. அணை நிரம்பி வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையை 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறார்கள். கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் காரணமாக குற்றியாறு- மோதிரமலை செல்லும் சாலையில் உள்ள சப்பாத்து பாலத்தை முழ்கடித்து வெள்ளம் செல்கிறது.
திற்பரப்பு அருவிப் பகுதியிலும் விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டிவருகிறது.
சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தொடங்கவில்லை. மேலும் சுற்றுலாபயணிகள் கூட்டமும் குறைந்து காணப்பட்டது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம்:
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலை 43.50 அடியாக இருந்தது. அணைக்கு 1173 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 669 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 70.55 அடியாக உள்ளது. அணைக்கு 218 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 160 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-
பேச்சிப்பாறை-34, பெருஞ்சாணி-15.8, சிற்றாறு 1-30.2, சிற்றாறு 2-8, மாம்பழத்துறையாறு-36, நாகர்கோவில்-28.4, பூதப்பாண்டி-15.2, கன்னிமார்- 21.2, ஆரல்வாய் மொழி-22, பாலமோர்-44.2, மயிலாடி- 54.2, கொட்டாரம் -36, இரணியல்-6.4, ஆனைக்கிடங்கு-35.4, குறுந்தன்கோடு-28.4, அடையாமடை-34, கோழிப்போர்விளை-31, முள்ளங்கினாவிளை-11, திற்பரப்பு-42, குழித்துறை-40, தக்கலை-29.