தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27, 30-ம் தேதிகளில் 2 கட்டமாக வாக்குப்பதிவு - 6-ம் தேதி வேட்புமனுதாக்கல் தொடக்கம்

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2019      தமிழகம்
Tamilnadu localelection 2019 12 03

சென்னை : தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நேற்று சென்னையில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

6-ம் தேதி மனுதாக்கல்

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும். இதற்கான அதிகாரப்பூர்வ தேர்தல் அறிவிக்கை வருகிற 6-ம் தேதி வெளியிடப்படும். அன்றே மனுதாக்கல் தொடங்க உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் 13-ம் தேதி ஆகும். வேட்புமனுக்கள் ஆய்வு 16-ம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற 18-ம் தேதி கடைசி நாள். ஓட்டுப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் 2-ம் தேதி நடைபெறும்.

ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 1,18,974 பதவியிடங்களை நிரப்பிட நேரடித்தேர்தல் நடைபெறும். இதில் 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 12,524 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களும் மற்றும் 99,324 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் அடங்கும்.

கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும். முதல் கட்டத்தில் 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6,251 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 49,638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 27.12.2019 அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.

இரண்டாம் கட்டத்தில் 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 6,273 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 49,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 30.12.2019 அன்று வாக்குப்பதிவு நடை பெறும். ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஆகிய 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், 4 விதமான வாக்குச் சீட்டுக்கள் பயன்படுத்தப்படும்.

பல வண்ணத்தில் வாக்கு சீட்டுகள்

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளில் ஒரு வார்டிற்கு வெள்ளை நிறத்திலும் பிரிதொரு வார்டிற்கு இளநீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.  இத்தேர்தலில், முதல் கட்ட வாக்குப்பதிவில் 31, 698 வாக்குச்சாவடிகளிலும், 2-ம் கட்ட வாக்குப்பதிவில் 32,092 வாக்குச்சாவடிகளிலும், மொத்தம் 63,790 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள அடிப்படை விவரங்களை கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தேசிய தகவலியல் மையத்துடன் இணைந்து ஆன்லைன் முறையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரித்துள்ளது. ஊரக பகுதிகளில் ஒரு கோடியே 64 லட்சத்து 28 ஆயிரத்து 941 ஆண் வாக்காளர்களும், ஒரு கோடியே 67 லட்சத்து 4 ஆயிரத்து 868 பெண் வாக்காளர்களும், 2 ஆயிரத்து 277 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 3 கோடியே 31 லட்சத்து 36 ஆயிரத்து 86 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் முதல் கட்டத் தேர்தலில் 1.64 கோடி வாக்காளர்களும், இரண்டாம் கட்டத் தேர்தலில் 1.67 கோடி வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் விபரம்:-

ஊராட்சித் தேர்தலுக்காக 870 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 16,840 உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஊராட்சி தேர்தலுக்காக ஒரு வாக்குச் சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் வீதம் சுமார் 5,18,000 அலுவலர்கள் வாக்குப்பதிவுப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இத்தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பதவியிடங்களைத் தவிர்த்து ஏனைய பதவியிடங்களுக்கு வாக்குப்பதிவிற்கு சுமார் 2,33,000 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு

மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நான்கு பதிவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இது தமிழ்நாட்டில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முன்னோடி திட்டமாகக் கொண்டு 114 வாக்குச்சாவடிகளில் செயல்படுத்த உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஒருவர் வீதம் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். வேட்பாளர்களின் கல்வித்தகுதி, சொத்து விபரம் மற்றும் குற்றவியல் விபரங்களை வாக்காளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் வேட்பு மனுவுடன் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் ஆணை உறுதி ஆவணம் வேட்பாளர்களால் படிவம் 3-ஏ-ல் தாக்கல் செய்ய வேண்டும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதிமொழி அளித்தால் போதுமானது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும் படிவம் “ஏ” மற்றும் படிவம் “பி” ஆகியவற்றைப் பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அலுவலர்/உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு திரும்பப் பெறும் நாளன்று பிற்பகல் 3.00 மணிக்கு முன்னதாகச் சேர்ப்பிக்க வேண்டும். காலம் கடந்து படிவங்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் சுயேட்சை வேட்பாளராக மட்டுமே கருதப்படுவார். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

செலவு வரம்பு

வேட்பாளர்களுக்கு அதிகபட்ச தேர்தல் செலவின வரம்பானது கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ரூ.9,000, கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ரூ.34,000, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ரூ.85,000, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ரூ.1,70,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 தினங்களுக்குள் உரிய அலுவலரிடம் தேர்தல் செலவினக் கணக்குகளை ஒப்படைத்திட வேண்டும். ஒப்படைக்கத் தவறுபவர்கள் மீது தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இயலாதவாறு 3 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

மக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்க ஏதுவாகவும், வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்திடவும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களால் கண்டறியப்பட்டு அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்படுவதோடு, அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை வீடியோ கிராபி/ நுண் தேர்தல் மேற்பார்வையாளர்கள்/ இணையதள கண்காணிப்பு (வெப் ஸ்ட்ரீமிங்) மூலம் பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாதாரண நேரடித் தேர்தல்கள் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைக் கொண்டு பின்வரும் பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல்கள் 11.01.2020 அன்று நடைபெறும். மாவட்ட ஊராட்சித்தலைவர் பதவியிடங்கள் 31, மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் பதவியிடங்கள் 31, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியிடங்கள் 388, ஊராட்சித் ஒன்றியத் துணைத்தலைவர்கள் பதவியிடங்கள் 388, கிராம ஊராட்சி துணைத்தலைவர் பதவியிடங்கள் 12, 524, மொத்தம் 13,362. தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் உடனடியாக அமலுக்கு வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை

தமிழகத்தில் கிராமப்புற ஊராட்சிகளுக்கான தேர்தல் தேதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கான வார்டு உறுப்பினர்கள் தேர்தல் தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்

உள்ளாட்சித்தேர்தல் அட்டவணை

வேட்புமனு தாக்கல் துவங்கும் நாள் 06.12.2019
வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் 13.12.2019
வேட்பு மனுக்கள் பரிசீலனை 16.12.2019
வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் 18.12.2019
முதல் கட்ட வாக்குப்பதிவு 27.12.2019
2-ம் கட்ட வாக்குப்பதிவு 30.12.2019
வாக்கு எண்ணிக்கை 02.01.2020.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து