முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை வெள்ளத்தை சந்திக்க அனைத்து நிலைகளிலும் தயாராக இருக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மழை வெள்ள அபாயம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது மழை வெள்ளத்தை சந்திக்க அனைத்து நிலைகளிலும் தயாராக இருக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

4, 399 பாதிப்பு பகுதிகள் கண்டுபிடிப்பு

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கடந்த 29-ம் தேதி வெளியிட்ட வானிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. இதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது அறிவுரை வழங்கி, தகுந்த உத்தரவுகளை வழங்கி வருகிறார். அதன் தொடர்ச்சியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக கடந்த செப்டம்பர் 23-ம் தேதி மற்றும் அக்டோபர் 22 ஆகிய தேதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வடகிழக்கு பருவ மழை தொடர்பாக எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சம்பந்தமாக அனைத்து துறைகளின் உயர் அலுவலர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கினார். கண்காணிப்பு அலுவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும், நேரடியாக ஆயத்த பணிகளை மேற்கொள்ளவும் முதல்வர் எற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

இதைத் தவிர, செப்டம்பர் 24 மற்றும் அக்டோபர் 4 ஆகிய இரு தினங்களில் தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து துறையைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களின் ஆய்வுக் கூட்டங்களும் நடைபெற்றன. வடகிழக்குப் பருவ மழையினால் உடனடியாக பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய 4,399 பகுதிகள் கண்டறியப்பட்டு, பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 639 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 9,162 பெண்கள் அடங்கிய 21,597 எண்ணிக்கையிலான முதல்நிலை மீட்பாளர்களும், கால்நடைகளை பாதுகாக்க 8,871 முதல்நிலை மீட்பாளர்களும், மழை காலங்களில் சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கும் 9,909 முதல்நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தயார்நிலையில் தமிழக அரசு

பேரிடர் பாதிப்புகளை தவிர்க்கவும், குறைக்கவும், நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளாக, 17,866 தடுப்பணைகள் கட்டப்பட்டு, 14,946 கசிவு நீர் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 9,250 நீர் செறிவூட்டும் கிணறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயன்படுத்தப்படாத 11,080 ஆழ்துளைக் கிணறுகளும், 3,434 திறந்தவெளி கிணறுகளும், நீர் செறிவூட்டும் கிணறுகளாக மாற்றப்பட்டுள்ளன. 3,174 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஆற்றுப்படுகைகள் தூர்வாரப்பட்டன. 3,662 ஆற்றுப்படுகைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 8,749 பாலங்கள் மற்றும் 1,40,228 சிறுபாலங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், முடிவு பெறாத பணிகளை உடனடியாக விரைந்து முடிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

மாநிலத்தில் உள்ள தாழ்வான மற்றும் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களைத் தவிர, 4,768 பள்ளிகள், 105 கல்லூரிகள், 2,394 திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், மாவட்டங்களில் 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2,897 ஜே.சி.பி இயந்திரங்கள், 2,115 ஜெனரேட்டர்கள் மற்றும் 483 ராட்சத பம்புகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தால், ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பயிற்சியளிக்கப்பட்ட மீட்பாளர்கள்

நடமாடும் முதல்நிலை மீட்பாளர் குழு ஒவ்வொரு பகுதி / வட்டம் / மண்டல வாரியாக அமைக்கப்பட்டு, அக்குழுக்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 1,000 காவலர்களைக் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை தவிர, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 4,155 காவலர்கள் (சென்னை நீங்கலாக) அனைத்து கடலோர மாவட்டங்களிலும், 1,844 காவலர்கள் இதர மாவட்டங்களிலும், சென்னை மாவட்டத்தில் 607 காவலர்களும் ஆக மொத்தம் 6,606 பயிற்சி பெற்ற காவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கீழ் 4,537 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 1,400 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. மேலும், 2,000 நபர்களுக்கு ஒத்திகைப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க, மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் (1070), மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையம் (1077), tnsmart செயலி மற்றும் சமூக வலைதளம், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல்வர் அறிவுரை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பருவமழை காலத்தில் கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தினார். மழை காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்ற தேவையான ஆட்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுக்கள் விரைவில் சென்றடைய ஏதுவாக, தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வயிற்றுப் போக்கு மற்றும் தொற்று நோய் ஏதும் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான அளவில் மற்றும் தேவையான மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். போதுமான அளவு மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும்.

மேலும், தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில், போதிய ஜெனரேட்டர் வசதிகளையும் ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும்.பேரிடர் காலங்களில் பற்றாக்குறையினை தவிர்க்கும் பொருட்டு இரண்டு மாத காலத்திற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக்கடைகளில் போதுமான அளவில் இருப்பில் வைக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு, அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் ஒருங்கிணைக்க வேண்டும்

கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய கலெக்டர்கள் நிலையிலான அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் / பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழை காலத்தில் உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் ஏற்படாமல் தவிர்க்க, அனைத்து அரசுத் துறையினைச் சார்ந்த செயலர்களும், துறைத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து நீர்தேக்கங்களும் கண்காணிக்கப்பட்டு வர வேண்டும். மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்ட இடங்களில் மழைநீர் துரிதமாக வெளியேற்ற வேண்டும். ஆற்றின் கரையோரம் உள்ள மக்களை மேடான இடங்களுக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி வலியுறுத்தினர்.

மழையால் உயிரிழப்பு

போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள இடங்களில், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்தினை சீரமைக்கவும், உயர் மட்டப் பாலங்கள் தேவைப்படும் இடங்களுக்கு நீண்ட கால பேரிடர் தணிப்பு நடவடிக்கையாக உரிய முன்மொழிவுகளை உடனடியாக அனுப்பவும் முதல்வர் உத்தரவிட்டார். சூறாவளி, வெள்ளம், இடி மற்றும் மின்னல் தொடர்பாக தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படங்களை பார்வையிட்டு, இந்தக் குறும்படங்களை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் திரையரங்குகள் மற்றும் கேபிள் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பவும் உத்தரவிட்டார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில், மேட்டுப்பாளையம் வட்டத்தில், 1-ம் தேதி பெய்த கன மழையின் காரணமாக, சிக்க தாசம்பாளையம் நடூர் கிராமத்தில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து, அருகில் உள்ள அரசு தொகுப்பு வீடுகளின் மேல் விழுந்ததினால், ஒரு தொகுப்பு வீடு மற்றும் மூன்று வில்லை வீடுகள் முற்றிலும் சேதமுற்றன. மீட்புப் பணியில், வருவாய்த் துறையினர் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினைச் சார்ந்த வீரர்கள் ஈடுபட்டனர். இந்த வீடுகளில் குடியிருந்த, 10 பெண்கள், 3 ஆண்கள் மற்றும் 2 குழந்தைகள் (1 பெண் + 1 ஆண்) உள்பட மொத்தம் 15 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

தலா ரூ.4 லட்சம் நிதியுதவி

மேலும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளுக்காக சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4. லட்சம் உடனடியாக வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். மேற்கூறிய 15 நபர்கள் தவிர, மேலும் 2 நபர்கள் இந்த சம்பவத்தில் தற்போது இறந்துள்ள நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம் உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

மழையால் பலியானோர்க்கு நிதி

தமிழகத்தில் 29, 30, மற்றும் டிசம்பர் 1-ம் தேதிகளில் பரவலாக பெய்த கன மழையின் காரணமாக, பல்வேறு நிகழ்வுகளில் 8 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 8 நபர்கள் காயமடைந்துள்ளனர். மேலும், 58 கால்நடை இழப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, 1305 குடிசை வீடுகளும், 465 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன. மேற்கூறிய இனங்களுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டார். கன மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக இடுபொருள் மானியம் வழங்கவும், காப்பீட்டுத் தொகையினை பெற்றுத் தரவும், காப்பீட்டுக் காலத்தை நீட்டிப்பு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்கள். கடலூர் மாவட்டத்தில் 805 நபர்கள் 4 நிவாரண முகாம்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் 38 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 73 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து கொடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயகுமார், சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் / கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், வருவாய்த் துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிதித் துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், வருவாய் நிர்வாக ஆணையர் / முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) தீரஜ் குமார், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து