முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் வெற்றி: மீண்டும் காங். தலைவராகிறார் ராகுல்

புதன்கிழமை, 4 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி : தேர்தலில் தொடர்ந்து வெற்றி கிடைப்பதால் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை மீண்டும் ஏற்க முடிவு செய்துள்ளார். 

பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி  தோல்வி அடைந்தது. குறிப்பாக 80 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ரேபரேலி தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது. காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி, தனது குடும்பத் தொகுதியான அமேதி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியைத் தழுவினார். இது அவரிடம் கடும் அதிருப்தியையும் விரக்தியையும் ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். மூத்த தலைவர்கள் சமரசம் செய்த போதிலும் அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு தலைமை பொறுப்பை சோனியா ஏற்றார். அவருக்கு உடல் நலம் சரி இல்லாததால் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்து வரும் இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைத்தது. குறிப்பாக மராட்டியம், அரியானா மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சியால் தனி பெரும் பான்மை பலத்தை பெற முடியவில்லை. அரியானாவில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட மாநில கட்சியான ஜே.ஜே.பி. கட்சியுடன் சேர்ந்து பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. மராட்டியத்தில் சிவசேனா கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்த்து இருப்பதால் அங்கு எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய நிலை பாரதீய ஜனதாவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அரசியல் மாற்றங்கள் காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது நடந்து வரும் சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. சி-வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாரதீய ஜனதா மீண்டும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு இடங்கள் கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. இது துவண்டு போய் கிடந்த ராகுல்காந்திக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. எனவே அவர் தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டு ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளன. அதில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றால் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட ராகுல் திட்டமிட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியையும் மீண்டும் ஏற்க முடிவு செய்துள்ளார். இதற்காக காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி தீர்மானம் கொண்டு வர உள்ளது. அந்த தீர்மானத்தை காங்கிரஸ் பொதுக்குழு ஏற்றுக் கொண்டாலே போதும், ராகுல் தலைவர் ஆகி விடுவார். இதன் மூலம் ராகுல் போட்டியின்றி 2-வது முறையாக ஏகமனதாக காங்கிரஸ் தலைவர் ஆக உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து