நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியைப் போல் உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.வை மகத்தான வெற்றி பெறச் செய்வோம் - ஜெயலலிதா நினைவிடத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தலைமையில் சபதம்

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019      தமிழகம்
EPS-OPS Vows Jaya Memorial 2019 12 05

சென்னை : விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போல், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்வோம் என்று ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் சபதம் மேற்கொண்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் பிரம்மாண்டமான அமைதி பேரணி சென்னை அண்ணாசாலை அண்ணாசிலை அருகில் இருந்து நேற்று புறப்பட்டது. இந்த பேரணிக்கு அ.தி.மு.க. ஒருங்கிணை்ப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கி்ணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். அண்ணா சாலையில் இருந்து புறப்பட்ட இந்த அமைதி பேரணி, வாலாஜா சாலை, வழியாக கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை வந்தடைந்தது. அங்கு கருப்பு சட்டை அணிந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முதல்வரும், துணை முதல்வரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தின் முன்பு மண்டியிட்டு வணங்கி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த விசேஷ மேடையில் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க, அதனை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திருப்பி சொல்ல உறுதியெடுத்து கொண்டனர். அதன் விபரம் வருமாறு:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதா , தமிழ் நாட்டு அரசியலில் புதிய சரித்திரங்களைப் படைத்த சாதனைச் செம்மல். சமூக நீதியில் உறுதியான நம்பிக்கை, பெண் விடுதலையில் அசைக்க முடியாத பற்றுறுதி, மதச்சார்பற்ற உறுதியான இறை நம்பிக்கை, எளியோருக்கு சமூகப், பொருளாதார பாதுகாப்பு அளிப்பதில் அர்ப்பணிப்பு உணர்வோடு தனது அரசியல் பாதையை புதுமையும், புரட்சியும் நிறைந்த போர்ப் பாதையாக மாற்றி வாழ்ந்தவர் நம் அம்மா. ஜெயலலிதாவால், தமிழ்நாடு அடைந்திட்ட வளர்ச்சிகளை, மக்களுக்கு எந்நாளும் எடுத்துக் கூறிட உறுதி ஏற்கிறோம்.

எம்.ஜி.ஆர். உருவாக்கிய, அ.தி.மு.க.வை தனது ஒப்பற்ற அறிவாற்றலால், கடின உழைப்பால், எண்ணற்ற தியாகங்களால், ஆயிரம் காலத்துப் பயிராக நிலைபெறச் செய்த ஜெயலலிதா வழியில், கழகப் பணிகளை தொடர்ந்து ஆற்றிடுவோம். எம்.ஜி.ஆரின் தொண்டராக பொது வாழ்வைத் தொடங்கி, அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக, பொதுச் செயலாளராக, 34 ஆண்டுகள் தன்னையே அர்ப்பணித்துப் பணியாற்றிய ஜெயலலிதாவின் மகத்தான தியாகத்தை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறுவோம். அவரது நிலைத்த புகழுக்குப் பெரும் புகழ் சேர்ப்போம். மக்களால் நான், மக்களுக்காகவே நான். உங்களால் நான், உங்களுக்காகவே நான். அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில், நொடிதோறும் தன்வாழ்வை, மக்களுக்கான தியாக வாழ்வாக வாழ்ந்த ஜெயலலிதாவின் கட்டளையை ஏற்போம். கழகம் நமக்கு என்ன செய்தது? என்பதைவிட, கழகத்திற்கு நாம் என்ன செய்தோம்? என்ற கேள்வியை நம் இதயத்தில் எழுப்பி ஒற்றுமையுடனும், உறுதியுடனும் கழகப் பணிகளை ஆற்றிடுவோம்.

எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும் என்ற ஜெயலலிதாவின் சூளுரையை மனதில் கொள்வோம். தமிழக மக்களுக்காக, அ.தி.மு.க. அரசு, மேற்கொண்டிருக்கும் மக்கள் நலப் பணிகளை, பட்டி தொட்டி எங்கும் எடுத்துரைப்போம். தமிழக மக்களிடையே அ.தி.மு.க. அரசுக்கு, மென்மேலும் நல்லாதரவு பெருகிட அயராது பணியாற்றுவோம். தமிழ் நாட்டு மக்களின் உயர்வும், மகிழ்ச்சியுமே, தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு ஏழை, எளியோருக்கும், பெண்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும், நிகரில்லாத் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி மக்கள் மனதில் நீங்காது நிறைந்திருக்கும் ஜெயலலிதா அமைத்துத் தந்த அ.தி.மு.க. அரசினை வெற்றிமேல் வெற்றி பெறச் செய்வோம்.

அ.தி.மு.க.வின் இதயமாய் வாழ்ந்து, ஓய்வறியாத ஒப்பற்ற உழைப்பின் மூலம் இந்த இயக்கத்தை வளர்த்து கட்டிக்காத்து புகழ்பெறச் செய்த ஜெயலலிதாவின் வழியில், அ.தி.மு.க.வின் உண்மைத் தொண்டராகவும், நம்பிக்கைக்குரிய விசுவாசியாகவும் தொடர்ந்து உழைத்திடுவோம். ஜெயலலிதா வழிகாட்டுதலில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒற்றுமையாகவும், கடினமாகவும் உழைத்து மகத்தான வெற்றியைப் பெற்றது போல, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்வோம்.

அ.தி.மு.க. அரசை தனது ஒப்பற்ற உழைப்பினால், உறுதிமிக்க கோட்டையாக மாற்றியவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டை தனது கடும் உழைப்பினால் அமைதிப் பூங்காவாக மாற்றியவர். எல்லோரும், எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதற்காக திட்டங்கள் பல தீட்டியவர் ஜெயலலிதா. ஏழை, எளியோருக்கு ஏற்றமிகு திட்டங்களைத் தீட்டியவர் ஜெயலலிதா. நடுத்தர மக்களுக்கு நல்ல பல திட்டங்கள் தீட்டியவர் ஜெயலலிதா. தமிழ் நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆக்கியவர் ஜெயலலிதா. அவரது வழியில், நாமும் சாதனை படைப்போம். மக்களுக்காக இன்னும் பல திட்டங்கள் படைப்போம். இருந்தபோதும் நம் அம்மா. மறைந்த பிறகும் நம் அம்மா. அப்போதும் நம் அம்மா. இப்போதும் நம் அம்மா. எப்போதும் நம் அம்மா. அந்த இதய தெய்வத்தின் வழியில் காப்போம், காப்போம். கழகத்தைக் காப்போம் !வெல்வோம், வெல்வோம். களம் அனைத்திலும் வெல்வோம். இவ்வாறு அ.தி.மு.க.வினர் சபதம் மேற்கொண்டனர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செய்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து